விசாரணையின் போது பற்களை பிடுங்கிய விவகாரம் பாதிக்கப்பட்டவர்கள் மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம்: ஏ.எஸ்.பி நேரில் ஆஜராக விரைவில் சம்மன்

சென்னை: விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்டவர்களின் பற்களை பிடுங்குவதாகவும் அதன் பிறகு கூழாங்கற்களை வாயில் போட்டு மெல்லச் செய்வதாகவும், அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி பல்வீர்சிங் மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு பின்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்த, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி பாஸ்கரன், பல்வீர்சிங் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி ஆறு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு ஐ.ஜிக்கு உத்தரவிட்டார்.

மாநில மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு எஸ்.பி மகேஸ்வரன் நேற்று விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பாதிக்கப்பட்ட செல்லப்பா, இசக்கிமுத்து, சுபாஷ், வேதநாராயணன் ஆகியோர் தங்களுடைய வழக்கறிஞர்களுடன் நேரில் ஆஜராகினர். அவர்களிடம் எஸ்.பி. மகேஷ்வரன் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவினர் சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு பதிவு செய்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் அளித்த வாக்கு மூலத்தை எழுத்துப்பூர்வமாகவும் சமர்ப்பிக்க அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க விரைவில் சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: