டேங்க் ஆபரேட்டர் பணிக்கு ரூ.5 லட்சம் லஞ்சம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவி கைது

போளூர்: டேங்க் ஆபரேட்டர் பணிக்கு ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்ட அதிமுக ஊராட்சி மன்ற தலைவியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியம் எடப்பிறை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (50). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை தொட்டி கட்ட அவருக்கு சொந்தமான இடத்தை தானமாக தந்ததால், எடப்பிறை ஊராட்சிக்கு டேங்க் ஆபரேட்டர் பணி வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோவிந்தசாமி உடல்நல குறைவால் இறந்துவிட்டார். தொடர்ந்து அவரது மனைவி பராசக்தி(42) என்பவர் அந்த பணியை தற்காலிகமாக செய்து வந்துள்ளார். மேலும் தனக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளதால் கணவரை இழந்து வறுமையில் இருக்கும் எனக்கு டேங்க் ஆபரேட்டர் பணியாளர் பணி நியமன உத்தரவு தனக்கு வழங்கும்படி அதிமுக ஊராட்சி தலைவி ஜீவாமூர்த்தியிடம் கோரிக்கை வைத்தார். அதற்காக ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என ஊராட்சி தலைவி லஞ்சம் கேட்டுள்ளார். முன்பணமாக ரூ.25 ஆயிரத்தை வாங்கும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊராட்சி தலைவியை கைது செய்தனர்.

Related Stories: