அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம்: இன்று முதல் அமல்

சென்னை: இன்று முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனைவரும் 100 சதவீதம் முகக்கவசம் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சுகாதார அதிகாரிகளுடனான தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் ஈஸ்வரன், பூமிநாதன், மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார், சுகாதார திட்ட இயக்குநர் உமா, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் கணேஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்திமலர் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின் திட்ட மதிப்பீடு என்பது ரூ.2,854.74 கோடி. இதில் உலக வங்கியின் பங்களிப்பு ரூ.1998.32 கோடி, ஏறத்தாழ 70% ஆகும். தமிழ்நாடு அரசின் பங்களிப்பு 30 சதவீதமான ரூ.856.42 கோடி. இன்றைக்கு கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. இன்று முதல் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டார அரசு மருத்துவமனைகள், வட்டம் சாரா அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் என்று தமிழ்நாட்டில் இருக்கும் 11,300க்கும் மேற்பட்ட மருத்துவ கட்டமைப்புகளுக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ களப்பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை 100% உறுதிப்படுத்திட வேண்டும். பொதுமக்கள் அச்சம் கொள்ளும் வகையில் பெரிய அளவிலான நோய் தொற்று பாதிப்புகள் இல்லை என்றாலும், நம்மை தற்காத்துக்கொள்ளும் வகையில் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: