புதிய கல்விக்கொள்கையை முழுமையாக ஏற்க முடியாது: பாஜ எம்எல்ஏவுக்கு அமைச்சர் பொன்முடி பதில்

சென்னை: ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்க முடியாது என்று பாஜ எம்எல்ஏவுக்கு, அமைச்சர் க.பொன்முடி பதில் கூறினார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு மொடக்குறிச்சி தொகுதி உறுப்பினர் சி.சரஸ்வதி (பாஜ) பேசியதாவது: புதிய தேசிய கல்விக் கொள்கை 2020, வருங்கால இளைஞர்களை சுய காலில் நிற்கச் செய்யும். எந்தச் செயலைச் செய்தாலும், புரிந்து செய்யக்கூடிய திறமையுள்ளவர்களாக இருப்பார்கள். புதிய தேசிய கல்விக் கொள்கை பொது மற்றும் தனியார் பள்ளிகளுக்குப் போதுமான தரத்தை நிர்ணயிக்கிறது. பள்ளிகளில் தொழிற்கல்வி இணைத்தல், பாடத் திட்டம் நாட்டின் கலாச்சாரம் மற்றும் கொள்கைகளை வெளிப்படுத்தும் வகையில் இருக்கிறது. நான் கூறியதெல்லாம் ஒன்றிய கல்விக் கொள்கையின் சிறு துளிகள்தான்.

அமைச்சர் பொன்முடி: புதிய கல்விக் கொள்கையில், சிறப்பு அம்சங்கள் ஒன்றிரண்டு இருக்கலாம். வேறு ஒன்றும் இல்லை. ஆனால், அதில் சொல்லப்பட்டிருக்கிற மிக முக்கியமான கருத்துகள் 3, 5, 8ம் வகுப்புகளுக்கும் மாநில அளவில் பொதுத் தேர்வு நடத்த வேண்டுமென்று சொல்கிறார்கள். அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?. அடுத்து, கல்லூரிகளில் படிக்கும்போது, முதல் ஆண்டு படித்தால் ஒரு சான்றிதழ், இரண்டாம் ஆண்டு படித்தால் ஒரு சான்றிதழ் டிகிரியே முடிக்க மாட்டார்கள் பாதி பேர். அந்தமாதிரியான சூழ்நிலைகளெல்லாம் வந்துவிடும் என்பதால்தான் புதிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று நாங்கள் சொல்கிறோம். இதில் பல்வேறு குறைகள் இருப்பதால் தான் முதல்வர், தமிழ்நாட்டுக்கு என்று ஒரு கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டுமென்று மாநில உரிமைகளின் அடிப்படையிலே ஒரு கல்விக் குழுவை உருவாக்கியிருக்கிறார். இவ்வாறு பதில் அளித்தார்.

Related Stories: