ஆட்சிக் கட்டிலில் இருந்து பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும் : மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தாக்கு

கொல்கத்தா : எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்த நினைக்கும் பாஜகவிற்கு இடம் கொடுத்துவிட கூடாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கு வங்க மாநிலத்திற்கு வழங்கவேண்டிய நிதியை ஒன்றிய அரசு விடுவிக்காமல் பாரபட்சம் காட்டுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். மேலும் ஓபிசி மாணவர்களுக்கான உதவித்தொகையை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்துக்கு எதிராக ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுவதற்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் மம்தா பானர்ஜி 2 நாள் தர்ணா போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினார்.  

இந்தநிலையில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஆட்சிக் கட்டிலில் இருந்து பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு யார் தலைமை தாங்குகிறார்கள் என்பது முக்கியமல்ல எனவும் இது மக்களுக்கும் பாஜகவுக்குமான நேரடி போராட்டம் எனவும் கூறினார். எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் சிறைக்கு அனுப்ப பாஜக திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகவும் கூறிய மம்தா, எல்லோரையும் சிறைக்கு அனுப்பிவிட்டால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய யாரும் இல்லாத நிலை உருவாகிவிடும் என்றும் குறிப்பிட்டார்.  

Related Stories: