கோர்ட்டுக்கு சென்று திரும்பியபோது ஆசனவாயில் மறைத்து கஞ்சா கடத்திய கைதி: போலீசார் அதிர்ச்சி

புழல்: போலீசார் கோர்ட்டுக்கு அழைத்துச்சென்றுவிட்டு, மீண்டும் சிறைக்கு அழைத்து வந்தபோது கைதியின் ஆசன வாயில் கஞ்சா மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது, போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புழல் விசாரணை சிறையில் சுமார் 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மதுராந்தகத்தைச் சேர்ந்த மணி என்கிற நீக்ரோ மணி (20), மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் கடந்த 2022 அக்டோபர் மாதம் முதல் புழல் சிறையில் உள்ளார்.

இவரை நேற்று முன்தினம் மதுராந்தகம் கோர்ட்டுக்கு போலீசார் அழைத்துச் சென்றுவிட்டு பின்னர் புழல் சிறையில் அடைப்பதற்காக அழைத்து வந்தனர். அப்போது, இவரை சிறை காவலர்கள் முழு பரிசோதனை செய்தபோது ஆசன வாயில் மறைத்து கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.  இதுகுறித்து, புழல் சிறை கூடுதல் கண்காணிப்பாளர் தர்மராஜ் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றம் சென்றவர் எப்படி கஞ்சா கொண்டு வந்தார், யார் கஞ்சாவை கொடுத்தார்கள் என் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு போலீசாருடன் சிறைக்கு திரும்பி வந்த கைதி ஆசனவாயில் மறைத்து கஞ்சா கடத்தி வந்த சம்பவம் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: