ஆன்லைன் ஷாப்பிங்கில் புகுந்து நூதன முறையில் வங்கி கணக்கில் பணம் மோசடி செய்யும் கும்பல்: அயனாவரம் பெண்ணிடம் 4 தவணையாக ரூ.80ஆயிரம் அபேஸ்

* ஆர்டர் பொருளை மாற்றி அனுப்பி மீண்டும் தொடர்புகொள்ளும் தந்திரம்

பெரம்பூர்: செல்போன் பயன்பாடு வந்தபிறகு பலரும் நேரடியாக கடைகளுக்கு சென்று, பொருட்களை வாங்குவதை தவிர்த்து ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கி வருகின்றனர். அதிலும், `கூகுள் பே’ என்ற ஒரு வசதி வந்த பிறகு பணப்பரிவர்த்தனை சம்பந்தமான புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு நாளும் புதுவிதமான மோசடிகள், புதுவிதமான புகார்கள் என ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சைபர் க்ரைம் போலீசாரிடம் தொடர்ந்து பணம் பறிகொடுத்தவர்கள் புகார் கொடுத்து வருகின்றனர். போலீசார் எவ்வளவு தான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், தொடர்ந்து ஆன்லைன் மோசடியில் ஏமாறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி ஆன்லைனில் ஏமாறுபவர்கள் அனைவரும் நன்கு படித்தவர்கள் என்பது கூடுதல் தகவல். ஏதாவது ஒரு சின்ன விஷயத்தில் அவர்கள் செய்யும் தவறினால், அவர்களது பணத்தை மோசடி கும்பல் சுரண்டுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. அந்த வகையில், ஏடிஎம் கார்டின் பின் நம்பரை வாடிக்கையாளர்களை சொல்ல வைத்து, மோசடி செய்த காலம் மாறி வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து நேரடியாகவே பணத்தை சுரண்டும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

பல்வேறு கம்பெனிகளை சேர்ந்த நிறுவனங்களில், பொதுமக்கள் பொருட்களை ஆர்டர் செய்யும்போது, அதனை பின்தொடர்ந்து கஷ்டமர் ஆர்டர் செய்யும் குறிப்பிட்ட அந்த பொருட்களை அனுப்புவது போல நடித்து வேறு பொருளை அனுப்பி, அதன்மூலம் நூதன முறையில் ஏமாற்றும் சம்பவங்களும் தற்போது அரங்கேறுகிறது. சென்னையில் இப்படி ஒரு மோசடி நடந்துள்ளது. அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா (35). இவர், கடந்த 4 நாட்களுக்கு முன்பு, ஆன்லைனில் உள்ளாடைகளை ஆர்டர் செய்துள்ளார். பொருட்களை டெலிவரி செய்யும்போது பணம் தரும் வகையில் ஆர்டர் செய்துள்ளார். அதன்பின்பு, நேற்று முன்தினம் அவருக்கு குறிப்பிட்ட ஆர்டர் செய்த நிறுவனத்திடம் இருந்து கொரியர் வந்துள்ளது. அதனை பணம் கொடுத்து வாங்கிக் கொண்ட சங்கீதா, பிரித்துப் பார்த்தபோது, அந்த பார்சலில் ஆர்டர் செய்த உள்ளாடைக்கு பதிலாக வேறு உள்ளாடை இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, குறிப்பிட்ட அந்த வெப்சைட்டில் உள்ள கஸ்டமர் கேர் நம்பருக்கு புகார் தெரிவித்துள்ளார். பலமுறை போன் செய்தும் அவர்கள் போனை எடுக்கவில்லை. அதன்பிறகு மீண்டும் அவர்களே தொடர்பு கொண்டு, உங்களது பிரச்னையை சரிசெய்து தருகிறோம் என்று கூறி, ஒரு லிங்கை அனுப்பி, அதை டவுன்லோடு செய்யும்படி கூறியுள்ளனர். அதற்கு சங்கீதா, பொருளை திரும்ப பெறுவதற்கு, நான் ஏன் லிங்கை டவுன்லோடு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். உடனடியாக அவர்கள் ஒரு அப்ளிகேஷனை அனுப்பி அதை பூர்த்தி செய்யுமாறு கூறியுள்ளனர். மேலும், மறுமுனையில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசிய நபர் எவ்வாறு அந்த அப்ளிகேஷனை பூர்த்தி செய்வது என்பது குறித்து சங்கீதாவுக்கு தெரிவித்தவாறு தொடர்ந்து அவர்களிடம் பேசியுள்ளார். பெயர், கொரியர் பெறப்பட்ட விவரம் அனைத்தையும் பெற்றுக்கொண்டு இறுதியாக கூகுள் பே பாஸ்வேர்டு கேட்டு உள்ளார். அதற்கு, சங்கீதா நான் ஏன் கூகுள் பே பாஸ்வேர்டு தர வேண்டும் என கூறியுள்ளார். உடனடியாக அவர்கள் இணைப்பை துண்டித்து விட்டனர்.

அன்று மாலையே சங்கீதா அக்கவுண்ட்டில் இருந்து நான்கு தவணைகளில் ரூ.20 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. உடனடியாக அவர் தனது அக்கவுண்ட்டை பிளாக் செய்து விட்டு கூகுள் பே அக்கவுண்ட்டை அன் இன்ஸ்டால் செய்துள்ளார். பணத்தை பறிகொடுத்த சங்கீதாவை நம்ப வைப்பதற்காக மறுமுனையில் பேசிய நம்பர், வாட்ஸ்அப்பில் தனது புகைப்படம்  என ஒரு புகைப்படத்தை அனுப்பி சங்கீதாவை நம்ப வைத்துள்ளார்.  இதுகுறித்து சங்கீதா, சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த மோசடி குறித்து போலீசார் விசாரித்தபோது, ஆன்லைனில் சில குறிப்பிட்ட கம்பெனிகளை பின்தொடரும் மோசடி கும்பல் அந்த கம்பெனியில் யார் ஆர்டர் தருகிறார்கள் என பார்த்து, அந்த ஆர்டரை அந்த கும்பல் எடுத்துக்கொள்கிறது. அதன்பின்பு, அவர்களுக்கு கொரியரில் பொருட்களை மாற்றி அனுப்புகின்றனர். பொருட்களை மாற்றி அனுப்பினால் தான், மீண்டும் அவர்களை தொடர்பு கொள்ள முடியும் என்ற ரீதியில் அப்படி செய்துவிட்டு, நாங்கள் கஸ்டமர் கேரில் இருந்து பேசுகிறோம் என்று கூறி குறிப்பிட்ட அப்ளிகேஷன் அல்லது லிங்கை அனுப்பி வாடிக்கையாளர்களை டவுன்லோடு செய்ய வைத்து, பிரச்னையை  தீர்த்து வைப்பதாக கூறி அப்ளிகேஷனை டவுன்லோடு செய்தவுடன் செல்போன் பயன்பாடு முழுவதும் அவர்கள் எடுத்துக்கொண்டு, அவர்களது வங்கி கணக்கு அல்லது கூகுள் பே போன்றவற்றில் இருந்து பணத்தை திருடி கொள்கின்றனர் என்பது தெரியவந்தது. எனவே, ஆன்லைனில் மலிவான விளம்பரங்களை நம்பி ஷாப்பிங் செய்யக்கூடாது எனவும், அவர்கள் கொடுக்கும் அப்ளிகேஷன் லிங்க் போன்றவற்றை தொடக்கூடாது என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: