தாம்பரம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஒரே நாளில் 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு அனுமதியா?: போக்குவரத்து ஆணையர் நேரில் ஆய்வு

தாம்பரம்: மேற்கு தாம்பரம் - தர்காஸ் பிரதான சாலையில் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு தினமும் 80க்கும் மேற்பட்ட புதிய இருசக்கர வாகனங்கள், 50க்கும் மேற்பட்ட புதிய நான்கு சக்கர வாகனங்கள் பதிவு செய்யவும், 50க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் எப்.சி செய்வதற்காகவும் வருகிறது. இதுதவிர ஒருநாளுக்கு 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெறவும், 100க்கும் மேற்பட்டவர்கள் ஆர்.சி புத்தகங்கள் பெறவும் வருகின்றனர். புரோக்கர்கள் மூலம் வரும் நபர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாகவும், அனைத்து பணிகளுக்கும் முக்கியமான பேப்பர் இருந்தால் மட்டுமே பணிகள் நடப்பதாகவும் புகார்கள் எழுந்தது. பெரும்பாலான வாகனங்களுக்கு ஆய்வு செய்யாமலேயே முறைகேடாக ஆவணங்கள் வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை டிஎஸ்பி தமிழ்மணி தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். புரோக்கர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தியதில் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலனுக்காகவும், முதல் நிலை ஆய்வாளர் சிவகுமார் மற்றும் இதர அலுவலருக்காக பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களுக்காக லஞ்சம் பெறப்பட்டது தெரிய வந்தது.  தொடர்ந்து, முதல் நிலை ஆய்வாளர் சிவகுமார் கடந்த ஆண்டு நவம்பரில் திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அமலாக்கப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையின்படி, தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் விருதுநகர் வட்டார போக்குவரத்து அமலாக்கப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

ஆனால், அறிவிப்பு வெளியான நாளிலிருந்து அவர் இன்னும் மாற்றப்படாமல் தாம்பரம் அலுவலகத்திலேயே பணியில் இருந்து வருகிறார். இந்நிலையில் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இரண்டாம் நிலை ஆய்வாளராக இருக்கும் சோம சுந்தரம் கடந்த 29ம் தேதி ஒரே நாளில் புதிய வாகன பதிவு, வாகன தகுதிச் சான்று, எல்எல்ஆர், பேட்ஜ், ரிவேல்யூ போன்ற சுமார் 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இப்படி ஒரே நாளில் 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என புகார் எழுந்ததையடுத்து நேற்று போக்குவரத்து ஆணையர் நிர்மல் ராஜ், கூடுதல் ஆணையர் மணக்குமார் ஆகியோர் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் வாகனங்கள் ஆய்வு செய்யப்படும் மைதானத்தில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது 29ம் தேதி வந்த விண்ணப்பங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் சேகரித்துக்கொண்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக இதுபோன்ற முறைகேடுகள் நடந்து வருவதோடு புரோக்கர்களின் ஆதிக்கம் மட்டுமே அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இதற்கு நிரந்தரமான தீர்வு ஏற்படும் வகையில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: