முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஜனநாயகம், சமூகநீதி சட்ட நுணுக்கம் குறித்து விழிப்புணர்வு பேச்சுப்போட்டி: என்.ஆர்.இளங்கோ எம்பி அறிவிப்பு

சென்னை: முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஜனநாயகம் மற்றும் சமூகநீதி சட்ட நுணுக்கங்கள் குறித்து விழிப்புணர்வு பேச்சுப் போட்டி நடைபெறும் என்று திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தனியார் சட்டக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஜனநாயகம் மற்றும் சமூகநீதி குறித்த சட்ட நுணுக்கங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான  மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாளினை முன்னிட்டு, தி.மு.க. சட்டத் துறையின் சார்பில், மாவட்டங்கள் அடங்கியுள்ள மண்டல வாரியாக  அரசியலமைப்புச் சட்டப் “பிரிவு14ம் - சமூகநீதியும்” எனும் தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ‘பேச்சுப் போட்டி குறிப்பிட்ட மாவட்டங்கள், தேதி, இடம், நேரத்தின்படி நடைபெற உள்ளது.

மண்டல வாரியாக நடைபெறும் பேச்சுப் போட்டியில், ஒவ்வொரு மண்டலத்திலும் சிறந்த முறையில் பேசி, முதல் ஐந்து இடங்களைப் பெறும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான இறுதி பேச்சுப் போட்டி  வரும் 15ம் தேதி சனிக்கிழமை, மாலை 3 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். இறுதிப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு, வரும் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் சென்னை, கோட்டூர்புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில், தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சான்றிதழ், பதக்கம், பரிசுத் தொகை வழங்கி சிறப்பிக்க உள்ளார்.  தி.மு.க. சட்டத் துறையைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள், தலைமைக் கழக வழக்கறிஞர்கள் - மாவட்ட, பகுதி நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: