தாம்பரம் மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பயங்கர தீ: நள்ளிரவில் போராடி அணைப்பு

தாம்பரம்: தாம்பரம், சானடோரியம் பகுதியில் மெப்ஸ் ஏற்றுமதி வளாகம் உள்ளது. இதில், 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள 4 தளங்கள் கொண்ட பழைய கட்டிடம் ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு, அதில், ஒவ்வொரு தளத்திலும் 1 நிறுவனம் என 4 நிறுவனங்கள் இயங்கி வந்தன. இதில், ஷிப்ட்கள் அடிப்படையில் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் இரவு நேர பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்துள்ளனர். திடீரென தீ விபத்து ஏற்பட்டு அலுவலகம் கொழுந்துவிட்டு எரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்தனர். தென்சென்னை மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் ராபின் காஸ்ட்ரோ தலைமையில் தாம்பரம், மேடவாக்கம், கிண்டி, அசோக் நகர், தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஸ்கை லிப்ட் தீயணைப்பு வாகனம் உள்பட 7 தீயணைப்பு வாகனங்கள், தாம்பரம் மாநகராட்சியில் இருந்து 3 தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு, 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்தனர். அவர்கள் தொடர்ந்து சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர்.

ஆனால், அதற்குள் கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்த கணினி, லேப்டாப் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள், டேபிள் சேர் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. முழுமையாக ஆய்வு செய்த பின்னரே சேதமடைந்த பொருட்களின் மதிப்புகள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்கட்ட விசாரணையில் மின் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: