உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா மண்டலமாக இசிஆர் சாலை பகுதியை மாற்ற வேண்டும்: பேரவையில் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் கோரிக்கை

சென்னை: சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக்கோரிக்கை மீதான விவாத்தில் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் (திமுக) பேசியதாவது: சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் 43 நியாய விலை கடைகள் மற்றும் நுகர்வோர் உணவு உதவி ஆணையர் அலுவலகம் ஆகியவை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அனைத்துக்கும் அரசு சொந்த கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

நியாயவிலை கடைகளில் 2001-3001 அட்டைதாரர்களுக்கு மேல் 5 கடைகளும், 1001-2000 அட்டைதாரர்களுக்கு மேல் 113 கடைகளும் உள்ளன. இதனால் பொதுமக்கள் உணவு பொருட்கள் வாங்க மிகவும் சிரமப்படுகின்றர். எனவே 1000க்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நியாய விலைக்கடைகளை இரண்டாக பிரிக்க வேண்டும்.  சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்பு பகுதியான 196வது வார்டு கண்ணகி நகர் மற்றும் 200வது வார்டு செம்மஞ்சேரி சுனாமி நகர் ஆகிய பகுதியில் 22420 குடியிருப்புகளுக்கும் சின்டெக்ஸ் டேங்க் மேல்தளத்தில் வைத்து குடிநீர் வழங்க வேண்டும்.

சோழிங்கநல்லூர் தொகுதி பெருநகர சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்டு சுமார் 13 ஆண்டுகள் ஆகியும் மயானத்திற்கு உதவியாளர்கள் பணியமர்த்தவில்லை. அதனால் இறப்பவர்களை தகனம் செய்வதற்கு சுமார் ரூ.10,000  வரை செலவிடுகிற நிலை உள்ளது. அதனால் உடனடியாக மயான உதவியாளரை பணியமர்த்தி இறந்தவர்களின் உடலை சென்னையை போன்று இலவசமாக அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கிழக்கு கடற்கரை சாலையை கடலில் இருந்து 200 மீட்டர் வரை கோஸ்டல் ஏரியா என்ற விதி நீலாங்கரை வரை உள்ளது. ஆனால் சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம், சின்ன நீலாங்கரை, பெரிய நீலாங்கரை, சின்னாண்டி குப்பம், பனையூர் குப்பம், நைனார் குப்பம், உத்தண்டி வரை சென்னை மாநகராட்சியாக விரிவாக்கப்பட்ட பகுதியாகும். இந்த ஊர்களுக்கு கடலில் இருந்து 500 மீட்டருக்கு வெளியேதான் வரைபட அனுமதி வழங்கப்படும் என உள்ளது. எனவே இந்த விதியை தளர்த்தி 200 மீட்டருக்கு வெளியிலிருந்தால் அனுமதி வழங்குவதைப் போல் இந்த பகுதிக்கும் அதே விதியை வரைமுறைப்படுத்த வேண்டும்.

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு போதுமான இட வசதி இல்லாத காரணத்தால் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும். சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ளடங்கிய பள்ளிகளை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியை மாநகராட்சியில் இணைக்க வேண்டும்.  பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி படகு குழாம் அமைத்து மேம்படுத்தி சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். புனித தோமையார்மலை ஒன்றியம் மேடவாக்கம், நன்மங்கலம் ஊராட்சியில் உள்ளடங்கிய ஏரியில் சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். மேலும் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததன் அடிப்படையில் படகு குழாம் அமைத்து சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும்.

கொட்டிவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி, அக்கரை, பனையூர், நைனார் குப்பம் ஆகிய பகுதியில் கடல் சீற்றம் ஏற்படும்போது பொதுமக்கள் பாதிக்காத வகையில் தடுப்புச் சுவர் ஏற்படுத்தி, பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.  சோழிங்கநல்லூர் முதல் பெரும்பாக்கம் வரை சாலையை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. குளோபல் மருத்துவமனை முதல் மேடவாக்கம் வரை சாலையை அகலப்படுத்த வேண்டும். இசி.ஆர். சாலை பகுதியை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா மண்டலமாக்க வேண்டும். அதிகமான மக்கள் தொகை காரணமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதனால் அந்த அலுவலகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: