குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு போலீசார் தாக்கியதாக பாஜ பிரமுகர் நாடகம்: ஓட்டேரியில் பரபரப்பு

சென்னை: சென்னை ஓட்டேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜோதிமணி, காவலர்கள் ஜெயசீலன், கார்த்திக் உள்ளிட்டோர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஓட்டேரி மேம்பாலம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, எஸ்எஸ் புரம் 6வது தெருவைச் சேர்ந்த பாஜ பிரமுகர் குணசேகர் (41) நண்பருடன் பைக்கில் வந்துள்ளார். போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதை பார்த்து, நண்பரை முன்கூட்டியே பைக்கை நிறுத்த சொல்லிவிட்டு, அவரை அனுப்பி வைத்துவிட்டு, நடந்துள்ளார். இவர், பாஜ கட்சியில் வடசென்னை மேற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளராக உள்ளார்.  போலீசார் வாகன சோதனையில் ஈடுபட வைத்த தடுப்புகளை அகற்றிவிட்டு, ஏன் சாலையில் தடுப்புகளை அமைத்துள்ளீர்கள் என கேட்டு குணசேகர் வாக்குவாதம் செய்தார். உடனே, இரவு பணியில் இருந்த ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பாவுக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார். அப்போது, நடந்து செல்ல வழி உள்ளது, ஏன் இவ்வாறு தகராறு செய்கிறீர்கள் என குணசேகரிடம் கேட்டுள்ளார். அப்போது நடந்த சம்பவங்களை வீடியோ பதிவாகவும் போலீசார் எடுத்துள்ளனர். இதனால், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குணசேகர், சிறிது நேரம் கழித்துச் சென்றுவிட்டார். வீடு சென்ற அவர் வாட்ஸ்அப் குரூப்பில் ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டார். அதில், ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா, தன்னை தகாத முறையில் பேசியதாகவும், ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாகவும், இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும் என தெரிவித்திருந்தார். மேலும் போலீசார், கமிஷனர் மற்றும் டிஜிபியை ஏமாற்றலாம், ஆனால் மனித உரிமை ஆணையத்தை ஏமாற்ற முடியாது என குடிபோதையில் அவர் பேசிய ஆடியோ வைரலானது.

இதையடுத்து, நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்ற குணசேகர், அங்கு கழுத்தின் உள்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், போலீசார் தாக்கியதாகவும் கூறி சிகிச்சை பெற்று அதன்பிறகு மருத்துவச் சீட்டோடு மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார். தொடர்ந்து, பாஜவின் வடசென்னை வாட்ஸ்அப் குரூப்பில் அவர் பேசிய ஆடியோ வைரலானது. தொடர்ந்து சில பாஜவினர், இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு, நாங்கள் காவல் நிலையத்தை முற்றுகையிடப் போகிறோம், கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிடப் போகிறோம் என மிரட்டியுள்ளனர். பாஜ பிரமுகர் குணசேகர் மீது, ஓட்டேரி காவல் நிலையத்தில் போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

* குணசேகர் மீது 6 குற்ற வழக்குகள் பாஜ பிரமுகர் குணசேகர் பற்றி போலீசார் வட்டாரத்தில் விசாரித்தபோது, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடந்த சம்பவத்திற்கு, 12 மணி நேரம் கழித்து குணசேகர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். உடனே சென்றால் மதுபோதையில் இருப்பது தெரிந்துவிடும் என காலம் தாழ்த்தி சென்றுள்ளார். அன்று நடந்த சம்பவங்கள் போலீசாரால் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் பாஜ பிரமுகர் திட்டமிட்டு போலீசாரை மிரட்டுவதும், அவர்கள் மீது பழிபோடுவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தற்போது சிக்கியுள்ள பாஜ பிரமுகர் மீது, ஏற்கனவே கொலை முயற்சி உள்ளிட்ட 6 குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: