அரிய வகை நோய் மருந்துகள் இறக்குமதிக்கு வரிவிலக்கு

புதுடெல்லி: அரிய நோய்களுக்கான மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ தேவைகளுக்கான உணவுகளுக்கு இறக்குமதி வரி விலக்கு அளித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இறக்குமதி வரி விலக்கு  ஏப்ரல் 1ம் தேதி(நாளை) முதல் அமலுக்கு வரும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுவாக மருந்துகளுக்கு அடிப்படையாக 10% இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. சில உயிர் காக்கும் நோய்களுக்கும், தடுப்பூசிகளுக்கும் சலுகை விகிதத்தில் 5% இறக்குமதி வரி அல்லது 0% இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், சிறப்பு மருத்துவ தேவைகளுக்கான அனைத்து மருந்துகள் மற்றும் உணவுகளுக்கும், அரிய நோய்களுக்கான தேசிய கொள்கை 2021 கீழ் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து அரிய நோய்களுக்குமான மருந்துகளுக்கு முழு இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.பல்வேறு புற்றுநோய் சிகிச்சைக்கு  பயன்படுத்தப்படும் பெம்ப்ரோலிசுமாப் மருந்துக்கும்  இறக்குமதி  வரி விலக்கு அளிக்கப்படும். இது நோயாளிகளுக்கு சற்று நிதி நிவாரணம்  அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 10 கிலோ எடை உள்ள ஒரு குழந்தைக்கு அரிய நோய்க்கான சிகிச்சைக்கு ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாயில் இருந்து 1 கோடி ரூபாய் வரை செலவாகிறது. குழந்தை வளர வளர செலவும் அதிகரிக்கிறது. எனவே, இறக்குமதி வரி விலக்கால் நோயாளிகளுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் நிவாரணம் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

Related Stories: