ஆஸ்திரேலியாவில் இந்தியா- காலிஸ்தான் ஆதரவாளர்கள் மோதல்: மேலும் 3 பேர் கைது

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்தியா- காலிஸ்தான் ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதல் தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இது ஆஸ்திரேலியாவில் வாழும் இந்துக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த  செயல்களுக்கு ஒன்றிய அரசும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. சீக்கியர்களுக்கான நீதி எனும் அமைப்பு சீக்கியர்களுக்காக காலிஸ்தான் எனும் தனிநாடு கோரி வருகிறது. மேலும்  கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் இருந்து பஞ்சாப்பை  பிரிப்பதற்கான வாக்கெடுப்பு ஆஸ்திரேலியாவில்   நடத்தப்பட்டது. அப்போது  இந்தியா ஆதரவாளர்கள் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  இடையே மோதல் ஏற்பட்டது.  அப்போது,தேசிய கொடியை கைகளில் பிடித்தபடி உயிருக்கு அஞ்சி ஓடியவர்களை விடாமல் துரத்தி துரத்தி ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.இதில் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த மோதல் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே  இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மேலும் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களின் விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: