தமிழகத்தின் அனைத்து நகராட்சி மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் குடிநீர் வழங்கும் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

சென்னை: அனைத்து மாநகராட்சி மற்றும் 9 நகராட்சிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரையின் 2023-24ம் ஆண்டிற்கான நகராட்சி, நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார். இதன் பின்னர் பல்வேறு புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அவை பின்வருமாறு:

* அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் குடிநீர் விநியோகம் முறையாக தொடர்ந்து 24 மணிநேரமும் கிடைக்கும் என்ற நிலையினை அடைந்திட பரீட்சார்த்த முறையில் திருச்சி, தூத்துக்குடி, நெல்லை, திண்டுக்கல், வேலூர், கடலூர், தாம்பரம், ஈரோடு மற்றும் நாகர்கோவில் ஆகிய மாநகராட்சிகளிலும் காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் ராஜபாளையம் ஆகிய நகராட்சிகளிலும் 5000 முதல் 10,000 வரையிலான குடிநீர் இணைப்புகள் மூலம் 24 மணிநேர குடிநீர் திட்டம் ரூ.420 கோடி மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்படும்.  

* மதுரை, கோவை, சேலம், திருச்சி, நெல்லை, திருப்பூர், தஞ்சை, நாகர்கோவில் மற்றும் தாம்பரம் ஆகிய 9 மாநகராட்சிகளில் உயிரி எரிவாயு தயாரிக்க பொது-தனியார் பங்களிப்புடன் தினமும் 930 எம்.டி. திறன் கொண்ட செறிவூட்டப்பட்ட உயிரி எரிவாயு கலன் அமைக்கப்படும்.

* கோவை, மதுரை, சேலம், திருச்சி, தூத்துக்குடி மற்றும் திருப்பூர் ஆகிய 6 மாநகராட்சிகளில் கட்டுமானம் மற்றும் இடிபாடு கழிவுகளை செயலாக்கும் ஆலைகள் ரூ.22.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

* மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, திருப்பூர், ஈரோடு மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளில் தினமும் 1,300 எம்.டி. உலர் கழிவுகளை பாதுகாப்பான முறையில் பிரித்து அப்புறப்படுத்தும் வகையில் முழு தானியங்கி வளமீட்பு மையங்கள் அமைக்கப்படும்.

* திண்டுக்கல், நாகர்கோவில், திருச்சி(ஸ்ரீரங்கம்) ஆகிய 3 மாநகராட்சிகள், நாகப்பட்டினம், மாங்காடு, ஸ்ரீவில்லிப்புத்தூர், கொமாரபாளையம், அறந்தாங்கி, புதுக்கோட்டை, திருவாரூர், உளுந்தூர்ப்பேட்டை மற்றும் பத்மனாபுரம் ஆகிய 9 நகராட்சிகளில் புதிய பஸ் நிலையங்கள் ரூ.174 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

* மதுரை, சேலம், நாகர்கோவில் மற்றும் தாம்பரம் ஆகிய 4 மாநகராட்சிகள் மற்றும் ஒட்டன்சத்திரம், திருமங்கலம், தென்காசி, பழனி, கம்பம், உசிலம்பட்டி, தேவக்கோட்டை மற்றும் புளியங்குடி ஆகிய 8 நகராட்சிகளில் உள்ள 17 பழைய தகன மேடைகள் ரூ.8.50 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடைகளாக மாற்றப்படும்.

* சென்னை நீங்கலாக பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 269 நீர்நிலைகள் ரூ.233.17 கோடி மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. இந்த நிதி ஆண்டில் மேலும் 50 நீர் நிலைகள் ரூ.42 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

* இயற்கை உரத்துக்கு ‘செழிப்பு’ என்ற பெயரில் தரக்குறியீடு நிர்ணயம் செய்து அனைத்து நகரங்களிலும் விற்பனை செய்து வருமானம் ஈட்ட வழிவகை செய்யப்படும்.

* சுற்றுலா நகரங்கள் மற்றும் ஆண்டுந்தோறும் சிறப்பு விழாக்கள் நடைபெறும் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அடிப்படை வசதிகள் உருவாக்கிடவும், மேம்படுத்திடவும் ரூ.20 கோடி வழங்கப்படும்.

* நகர்ப்புற உள்ளாட்சிகளை பசுமையாக்கி இயற்கை சூழலை மேம்படுத்தவும் மற்றும் குடியிருப்புகளில் தோட்டங்களை அமைக்க பொது மக்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டிப்பட்டி, சோழவந்தான், வல்லம், மாமல்லபுரம், கருங்குழி, தரங்கம்பாடி, உத்தரமேரூர், பெரியநாயக்கன்பாளையம், கோத்தகிரி மற்றும் மண்ணச்சநல்லூர் ஆகிய 10 பேரூராட்சிகளில் வளம் மீட்பு பூங்காவில் சமுதாய தோட்டங்கள் அமைக்கப்படும்.

Related Stories: