அடிக்கடி வீட்டுக்கு வருவது பிடிக்கவில்லை... தாயுடன் தகாத உறவு வைத்திருந்த டிரைவரை அடித்து கொன்ற மகன்: ஆட்டோவில் சடலத்தை ஏற்றி வீட்டு முன் வீச்சு

சேந்தமங்கலம்: தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட லாரி டிரைவரை அடித்து கொலை செய்து ஆட்டோவில் சடலத்தை கொண்டு சென்று வீட்டு முன் வீசிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ராமநாதபுரம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (45) லாரி டிரைவர். இவருக்கு 14 வயதில் மகள் உள்ளார். கடந்த 12 ஆண்டுக்கு முன்பு மனைவி இறந்து விட்டதால், சுரேஷ் தனது தந்தை சுப்பிரமணி, தாய் மீனாம்பாள் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், லாரி வேலைக்கு செல்லும்போது எருமப்பட்டி பொட்டிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த முத்தையன் மனைவி கஸ்தூரியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அவரது வீட்டில் அடிக்கடி தங்கி தகாத உறவில் ஈடுபட்டு வந்தார். கஸ்தூரியின் மகன் சந்துரு(19). இவர், ராசிபுரம் அருகே தனியார் கல்லூரியில் பொறியியல் முதலாமாண்டு படித்து வருகிறார். தனது தாயுடன் சுரேஷ் தகாத உறவில் ஈடுபட்டு வருவது சந்துருவுக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து பலமுறை தாயிடம் தெரிவித்துள்ளார். ஆனாலும் அவர்கள் தொடர்பு நீடித்துள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுரேஷ் குடிபோதையில் டூவீலரில் கஸ்தூரி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த சந்துரு, ‘எங்கள் வீட்டுக்கு வரக்கூடாது’ எனக்கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். திடீரென கல்லை எடுத்து சுரேசின் தலையில் தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.

பின்னர் சந்துரு ஒரு மினி ஆட்டோவை வாடகைக்கு பிடித்து வந்து டிரைவரிடம், எனது உறவினர் குடிபோதையில் மயங்கிவிட்டார், அவரை வீட்டில் விட்டு வர வேண்டுமென கூறி சுரேஷின் உடல் மற்றும் அவரது டூவீலரை மினி ஆட்டோவில் போட்டுக் கொண்டு நள்ளிரவில் ராமநாதபுரம் புதூர் சென்றுள்ளார். அங்கு, அவரது வீட்டின் முன் உடலையும், டூவீலரையும் போட்டுவிட்டு தப்பி விட்டார். இதுகுறித்து தகவலறிந்த சேர்ந்தமங்கலம் போலீசார் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் கொலை செய்தது சந்துருதான் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.

* நண்பர்களுடன் தொடர்பை கண்டித்த பாட்டியை கொன்று அண்டாவில் அடைத்துவைத்த பேத்தி கைது

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடையை சேர்ந்த சீனிவாசன் மனைவி செல்வமணி (55). இவர்களுக்கு 2 மகன்கள், 3 மகள்கள்.  அனைவரும் திருமணமாகி சென்று விட்டனர். கணவர் இறந்ததால் தனியாக வசித்து வந்த செல்வமணி, நேற்றுமுன்தினம் நிர்வாண நிலையில் பிணமாக அண்டாவில் அடைக்கப்பட்டு  கிடந்தார். இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்கு பதிந்து செல்வமணியின் பேத்தி ஜெயலட்சுமியை (28) சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், ஜெயலட்சுமிக்கும், அவரது கணவர் ரமேசுக்கும் இடையே தகராறில் பாட்டி செல்வமணி வீட்டுக்கு அடிக்கடி வருவாராம். இதேபோல் கடந்த 23ம்தேதி காலை 11 மணிக்கு ஜெயலட்சுமி, அவரது மகன் மித்ரனுடன் (2) பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார்.

பின்னர் 3 பேரும் கோயிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தனர். அன்று இரவு, ஜெயலட்சுமி ஆண் நண்பர்களுடன் பழகுவதையும், அவர்களுடன் உள்ள தொடர்பையும் விட்டுவிடும்படியும், மீறி தொடர்ந்தால் மகள், மருமகனிடம் கூறுவேன் எனவும் பாட்டி எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் மறுநாள் (24ம்தேதி) காலை பாட்டியின் காலை பிடித்து வாரி தள்ளி விட்டுள்ளார். இதில் அவருக்கு பின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் கூச்சலிட்டதால் சேலையை உருவி கழுத்தை நெரித்து கொன்றதோடு, அண்டாவுக்குள் போட்டு மூடிவிட்டு சென்று விட்டார். ஆனால் கொலை பற்றி தனக்கு தெரியாதது போல உறவினர்களுடன் வந்து செல்வமணி உடலை பார்த்து ஒப்பாரி வைத்து நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து  ஜெயலட்சுமியை போலீசார் கைது செய்தனர். பாட்டியிடம் இருந்து எடுத்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.20,000, தங்க மோதிரத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

Related Stories: