சென்னையில் ஏப்.3ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் 20 எதிர்க்கட்சிகள் ஆலோசனை: ஒய்எஸ்ஆர் காங்., பிஜூ ஜனதாதளம் முதல்முறையாக பங்கேற்பு

புதுடெல்லி: சென்னையில் வரும் திங்கட்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 20 எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்த ஆலோசனை கூட்டத்தில் முதன்முறையாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் கட்சிகள் பங்கேற்க உள்ளன. நாடு முழுவதும் சமூக நீதியை முன்னெடுத்து செல்வது தொடர்பாக தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பா.ஜ அல்லாத எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும்  ஏப்.3ம் தேதி நடக்கும் இந்த கூட்டத்தில் 20 எதிர்க்கட்சிகள் பங்கேற்க  உள்ளன. நேரடியாகவோ அல்லது காணொலி மூலமாகவோ அவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை தெரிவிக்க உள்ளனர்.

 முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்யாதவ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.சுரேஷ், தேசியமாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, பாரதிய ராஷ்ட்ரீய சமிதி தலைவர் கேசவ்ராவ், பிஜூ ஜனதா தளம் தலைவர் சாஸ்மித் பத்ரா, மார்க்சிஸ்ட் தேசிய செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் டி.ராஜா, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரையன் ஆகியோர் பங்கேற்க சம்மதம் தெரிவித்து உள்ளனர்.

நாட்டின் இன்றைய நிலை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. பா.ஜ அல்லாத எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் முதன்முறையாக பிஜூ ஜனதா தளமும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்க சம்மதம் தெரிவித்து உள்ளன. இந்த கூட்டம் அரசியல் கூட்டம் இல்லை என்பதாலும், சமூக நீதி தொடர்பான ஆலோசனை கூட்டம் என்பதாலும், அதை விட முக்கியமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்த கூட்டம் என்பதால் பங்கேற்க உள்ளதாக பிஜூ ஜனதா தளம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி பங்கேற்க உள்ளதாக தெரிவித்து உள்ளன.  

Related Stories: