இலகு ரக வாகன ஓட்டுநர்கள் இனி பேட்ஜ் பெற வேண்டிய அவசியம் இல்லை: போக்குவரத்துத்துறை ஆணையர் நிர்மல் ராஜ் பேட்டி

சென்னை: இலகு ரக வாகனங்களான டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்கள் இனி பேட்ஜ் பெற வேண்டிய அவசியம் இல்லை என போக்குவரத்துத் துறை ஆணையர் நிர்மல் ராஜ் தெரிவித்துள்ளார். தமிழக போக்குவரத்துத் துறை ஆணையர் நிர்மல் ராஜ் கூறியதாவது: ஓட்டுநர் தேர்வு நடத்துவதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் மோட்டார் வாகன பகுதி அலுவலகங்களில் 145 கார்கள் கொள்முதல் செய்யப்படும். இந்த கார்கள் ஓட்டுநர் உரிமம் தேர்வு நடத்துவதற்கு மட்டும் பயன்படுத்தப்படும். இதன் மூலம் கார் இல்லாதவர்களும் நேரடியாக வட்டார போக்குவரத்து அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்து உரிமம் பெற முடியும். கார்களை இயக்க தெரிந்தவர்கள் கட்டணம் செலுத்தி ஒட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கு சென்று உரிமம் பெற வேண்டிய தேவை இருக்காது. சோதனை அடிப்படையில் கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளம் அமைக்கப்படவுள்ளது. தேர்வு தளங்கள் கணினிமயமாவதால் மனித தலையீடு இல்லாமல் தகுதி வாய்ந்தவர்கள் மட்டும் தேர்வாகி ஓட்டுநர் உரிமம் பெறுவர்.

மேலும் தேர்வின் தரம் அதிகரிக்கும், இதனால் தரமான ஓட்டுநர்கள் உருவாவதால் விபத்துகள் குறையும். முதல் கட்டமாக 20 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இந்த தேர்வு தளம் அமைக்கப்படும். அதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது, தொடர்ந்து இத்திட்டம் அனைத்து அலுவலகங்களிலும் விரிவுப்படுத்தப்படும். வணிகம் சார்ந்த இலகு ரக வாகனங்களுக்கு பொதுப்பணி பேட்ஜ் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இலகு ரக வாகன உரிமையாளர்கள் டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்கள் இனி பேட்ஜ் பெற வேண்டிய அவசியம் இல்லை. இந்த அறிவிப்பை ஓட்டுநர்கள் வரவேற்கின்றனர்.

இலகு ரக வகனங்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, கனரக, சரக்கு வாகனங்கள் பேட்ஜ் பெறும் நடைமுறை தொடரும். வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்க தானியங்கி சோதனை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது. தனியார் பங்களிப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதில் அரசு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் தனியார் நிறுவனங்கள் தானியங்கி மையத்தை அமைத்து அங்கு சோதனை பணிகளை மேற்கொள்ளும். இயந்திரங்கள் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் நேரடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும், மனிதர்கள் தலையீடு இருக்காது. இதன் மூலம் தகுதியற்ற வாகனங்களுக்கு தகுதி சான்று கிடைக்காது. விபத்துகளும் பெரும் அளவில் தவிர்க்கப்படும்.

ஆர்டிஓ அலுவலகங்களுக்கு நேரடியாக வராமலேயே ஆதார் மூலம் எல்எல்ஆர், ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு போன்ற 42க்கும் மேற்பட்ட சேவைகளை இணையதளம் வாயிலாக பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் பொதுமக்கள் எளிமையாக சேவைகளை பெற முடியும். மேலும் விபத்துகளில் காயமடைவோருக்கு உதவும் நபர்களுக்கு ஒன்றிய அரசு ரூ.5000 ஊக்கத்தொகை வழங்குகிறது, தற்போது தமிழக அரசு சார்பாகவும் கூடுதலாக ரூ.5000 என மொத்தம் ரூ.10,000 வழங்கப்படவுள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: