ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியை மறித்து நிறுத்தி மக்காச்சோளம் ருசித்த காட்டு யானையால் பரபரப்பு

சத்தியமங்கலம்: ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியை வழிமறித்து மக்காச்சோளத்தை பறித்து ருசித்த காட்டு யானையால் பரபரப்பு நிலவியது. இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் காணப்படுகின்றன. இந்த வனப்பகுதி வழியாகத்தான் தமிழக, கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

நேற்று காலை கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் இருந்து மக்காச்சோளம் மூட்டைகள் ஏற்றிய லாரி ஈரோடு செல்வதற்காக சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்தது. தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி அருகே லாரி பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றது. அப்போது வனப்பகுதியைவிட்டு வெளியேறிய காட்டு யானை சாலையோரம் நின்றிருந்த லாரியில் இருந்து தனது தும்பிக்கையால் மூட்டைகளை பறித்து மக்காச்சோளத்தை சுவைத்தது.

மக்காசோளத்தை ருசித்தபடி சாலையின் நடுவே காட்டு யானை நின்றதால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். கடுமையாக போராடி காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதைத்தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன. இதன் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: