கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்தில் சேதமடைந்து காணப்படும் மலைப்பட்டு பாலம்: ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே மலைப்பட்டு பகுதியில் பாலம் கட்டப்பட்ட 6 மாதத்தில் சேதமடைந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை – பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையையும், சென்னை – திருச்சி ஜி.எஸ்.டி. சாலையையும் இணைக்கும் சாலையாக ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலை உள்ளது. ஸ்ரீபெரும்புதூர், கட்சிப்பட்டு, பிள்ளைப்பாக்கம், நாவலூர், கொளத்தூர், மலைப்பட்டு, சேத்துப்பட்டு, புஷ்பகிரி, மணிமங்கலம், முடிச்சூர், பெருங்களத்தூர் வழியாக தாம்பரம் ஜிஎஸ்டி சாலையை இணைக்கிறது.

மேற்கண்ட பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள், தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் என பல ஆயிரம் மக்கள் இந்த சாலையில் சென்று வருகின்றனர். தற்போது தாம்பரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை மாநகர பேருந்து தடம் எண் 583-சி, 583-டி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதனால் வாகன நெரிசலும், அடிக்கடி விபத்தும் நடப்பதால் இரு வழிச்சாலையான இந்த சாலையை நான்கு வழிச் சாலையாக அமல்படுத்த நெடுஞ்சாலைத்துறை சார்பில் திட்டமிடப்பட்டது. இதில் முதற்கட்டமாக ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பிள்ளைபாக்கம் வரை 3.5 கிலோமீட்டர் சாலை 4 வழிச் சாலையாக 3 ஆண்டுகளுக்கு முன்பு அகலபடுத்தபட்டது.

தற்போது இரண்டாம் கட்டமாக பிள்ளைப்பாக்கம் முதல் மணிமங்கலம் வரை 8.4 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.108 கோடி மதிப்பில் சாலை சீரமைக்கபட்டது. குறிப்பாக கொளத்தூர், மலைப்பட்டு, மணிமங்கலம், ஆகிய 3 இடங்களில் தரைப்பாலம் அமைக்கப்பட்டன.  இந்த பணிகள் முடிவடைந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சாலை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே தற்போது மலைப்பட்டு பகுதியில் உள்ள மேம்பாலத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சிமென்ட் கான்கிரீட் பெயர்ந்து, கம்பிகள் நீட்டியபடி சேதம் அடைந்துள்ளன.

இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்களின் டயர்கள் கம்பியில் சிக்கி பஞ்சர் ஏற்பட்டு அடிக்கடி பழுதடைகின்றன. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேம்பாலம் அமைக்கப்பட்ட 6 மாதத்தில் பாலம் சேதமடைந்துள்ளது வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் தரமற்ற முறையில் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்தில் சேதமடைந்து காணப்படும் மலைப்பட்டு பாலம்: ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: