புளியந்தோப்பில் போதைப்பொருள் கடத்தல் 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: போதை பொருள் கடத்திய வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  சென்னை புளியந்தோப்பு ஆசீர்வாதபுரம் பகுதியில் போதைபொருள் கடத்தல் நடைபெறுவதாக ேதசிய போதைபொருள் தடுப்பு பிரிவுக்கு கடந்த 2019 மார்ச் மாதம் தகவல் கிடைத்தது. இதையடுத்து, 2019 மார்ச் 8ம் தேதி தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆசீர்வாதபுரம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, மாலை 7.30 மணிக்கு அந்த பகுதியில் உள்ள அரசு இஸ்லாமிய பள்ளி அருகே அதிகாரிகள் சென்றபோது அங்கு நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவை நோக்கி பைக்கில் வந்த இருவர் ஆட்டோ டிரைவரிடம் ஒரு பார்சலை கொடுத்துவிட்டு வேகமாக சென்றதை பார்த்தனர். இதையடுத்து பைக்கில் சென்ற இருவரையும் மடக்கி பிடித்த அதிகாரிகள் ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தியதுடன் ஆட்டோவில் சோதனையும் நடத்தினர்.

 சோதனையில், பைக்கில் வந்த இருவரும் ஆட்டோ டிரைவரிடம் கொடுத்த பார்சல் இருந்தது. பார்சலை பறிமுதல் செய்து சோதிட்டதில் அதில் 450 கிராம் மெத்தபெட்டமைன் என்ற போதைபொருள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஏழு கிணறு பகுதியை சேர்ந்த முகமது  பரீத் (31), திருவல்லிக்கேணியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவகுமார் (27), ஏழுகிணறு பகுதியை  சேர்ந்த ஜியாவுல்ஹக் (31) ஆகியோரை கைது செய்த போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 3 பேர் மீதும் போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான முதலாவது கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா முன்பு விசாரணைக்கு வந்தது. ேதசிய போதைபொருள் தடுப்பு பிரிவு சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அசோக் சக்கரவர்த்தி ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், போதை பொருளை சட்டவிரோதமாக கடத்துவது பொதுமக்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. போதை பொருளால் சமூக, பொருளாதார நிலை பாதிக்கப்படுவதுடன் தேசத்தின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. போதை பொருள் கடத்தல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலையும், பொருளாதார வளர்ச்சிக்கு கடுமையான பாதிப்பையும் ஏற்படுத்துகிறது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: