ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கு: சென்னை விமான நிலையத்தில் மேலும் ஒருவர் கைது

சென்னை: ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி நிறுவன மோசடி வழக்கில் ஏற்கனவே 9 பேர் கைதான நிலையில் மைக்கேல் ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை அரும்பாக்கத்தை தலைமையிடமாக கொண்டு ஆருத்ரா என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இதற்கு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை என மாநிலம் முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தின் மூலம் ‘தங்களது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 1 லட்ச ரூபாய்க்கு மாதம் 25 முதல் 35 சதவீதம் வரை வட்டி தரப்படும் என்று சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இதை நம்பி, தமிழ்நாடு முழுவதும் ஆருத்ரா நிதி நிறுவனத்தில் 1 லட்சம் பேர் சுமார் 2,438 கோடி ரூபாய் முதலீடு செய்தனர்.இந்நிலையில், திடீரென ஆருத்ரா நிதி நிறுவனத்தை மூடிவிட்டு இயக்குநர்கள் தலைமறைவாகி விட்டனர். இதனால், முதலீடு செய்திருந்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். தமிழ்நாடு முழுவதும் புகார் அளித்தனர். இந்த வழக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

ஆருத்ரா நிதி நிறுவனம் மீது 420, 406, 409, 120(பி), 109, 34 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இயக்குநர்கள், ஏஜென்ட்கள் என 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் மோசடி தொடர்பாக நிதி நிறுவன இயக்குநர்களான பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், நாகராஜ் மற்றும் மேலாளர்களான பேச்சுமுத்து ராஜா, அய்யப்பன், ஏஜென்ட் ரூசோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

முக்கிய குற்றவாளிகளான மேலாண் இயக்குர் ராஜசேகர், அவரது மனைவி உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகிய 3 பேர் வெளிநாடு தப்பினர். வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற 3 பேரும் துபாயில் தங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் அவர்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.

இவர்கள் வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு வரும்பட்சத்தில் அவர்கள் தொடர்பான தகவல் தெரிவிக்கும்படி உத்தரவிட்டிருந்த நிலையில் ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர்களின் ஒருவரான மைக்கேல் ராஜ் என்பவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இவர் துபாயில் இருந்து சென்னை வந்தபொழுது  லுக்அவுட் நோட்டீஸ் காரணமாக சுங்கத்துறை அதிகாரிகள் குற்றப்பிரிவு போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் மைக்கேல் ராஜ் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த விவகாரத்தில் ஹரிஷ் மற்றும் மாலதி ஆகியோர் 2 நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையிலும், லுக்அவுட் நோட்டீஸ் அடிப்படையிலும் மைக்கேல் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: