பிரிட்டிஷ் கடற்படை வீரர்கள் தொண்டு நிறுவனத்தில் சேவை

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள தொண்டு நிறுவனத்தில் பிரிட்டிஷ் கடற்படை வீரர்கள் தாமாக முன்வந்து சேவை செய்தனர். சென்னை துறைமுகத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த டாமர் எனும் கப்பல் வந்தது. அதில் வந்தவர்கள் நட்பு, நல்லுறவு, கலாச்சாரம், சேவை மற்றும் சுற்றுலா நோக்கத்தில் ஒரு வாரம் இங்கு தங்கியுள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு தெருவோர சிறார்களுக்கான உலககோப்பை போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. அப்போது அதில் பங்கேற்கச் சென்ற தண்டையார்பேட்டையில் உள்ள தொண்டு நிறுவன  சிறுவர்கள் அணி உலகக் கோப்பையை வென்றது.

மேலும் கடந்த ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தில் கால் இறுதிவரை இந்த அணி சென்றது.  இதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக, இங்கு வந்த பிரிட்டிஷ் நாட்டு கடற்படை வீரர்கள் 15க்கும் மேற்பட்டோர், தண்டையார்பேட்டை சேணியம்மன் கோயில் தெருவில் உள்ள இந்த தொண்டு நிறுவனத்தில், தங்களது உயர் அதிகாரியான ஆலிவர் பால்ஹாட் ஷெட் தலைமையில் நேற்று முன்தினம் தன்னார்வமாக  முன்வந்து தொண்டு செய்தனர்.

இங்கு சுத்தம் செய்வது, சுவர்களுக்கு வண்ணம் பூசுவது,  எலெக்ட்ரிக்கல் தொடர்பான வேலைகளை செய்வது, நீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை அவர்கள் செய்தனர். பின்னர் அங்கிருந்தவர்களோடு கால் பந்தாட்டமும் விளையாடினர். பிரிட்டிஷ் கப்பல் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் சென்னைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: