மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு வெறுக்கத்தக்க பேச்சுக்களை தவிர்ப்பதே அடிப்படை தேவை: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: ‘மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு வெறுப்பு பேச்சுக்களை தவிர்ப்பதே அடிப்படை தேவை’ என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதில் ஈடுபடுபவர்கள் தண்டிக்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு, வெறுப்பு பேச்சு பேசுபவர்கள் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புகாருக்காக காத்திருக்காமல் வழக்குகளை பதிவு செய்ய வேண்டுமெனவும் கடந்த ஆண்டு அக்டோபரில் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு வெறுப்பு பேச்சுகளை தவிர்ப்பதுதான் அடிப்படைத் தேவை. இதற்கு வெறும் புகார்களை பதிவு செய்வதால் மட்டும் தீர்வு கிடைக்காது. எனினும், எப்ஐஆர் பதிவு செய்வதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’’ என கேட்டனர். அதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக 18 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  இந்த மனு இன்று மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது.

Related Stories: