வாலாஜாபாத் ஒன்றியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்தில் ஊராட்சி செயலர், மக்கள் நல பணியாளர் உட்பட பல்வேறு காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கூட்டமைப்பின் தலைவர் அஜய்குமார் தலைமை தாங்கினார்.இக்கூட்டத்தில், ஊராட்சியில் உள்ள வளர்ச்சி திட்ட பணிகளை எவ்வாறு மேற்கொள்வது, புதிய திட்ட பணிகளை மாவட்ட நிர்வாகத்தில் இருந்தும் ஒன்றிய நிர்வாகத்திடமிருந்தும் எவ்வாறு பெறுவது, மேலும் மக்கள் பிரச்னைகளை மாவட்ட நிர்வாகத்திடம் எவ்வாறு எடுத்துரைப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டன.

இதனைதொடர்ந்து, மாநில நிதிக்குழு மானியம் காலதாமதம் இன்றி வழங்கப்பட வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாதந்தோறும் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட வேண்டும். ஊரக பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலை பணிகளின்போது, பாதிக்கப்படும் மின் கம்பங்கள், குடிநீர் குழாய்களை, நெடுஞ்சாலை துறையினர் அவர்களது நிதியிலேயே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், உடனடியாக சரிசெய்ய வேண்டும். ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், மக்கள் நலப்பணியாளர் காலிப்பணியிடங்களை அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களே நிரப்பிக்கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

ஊராட்சி செயலாளர் பணியிடம் காலியாக உள்ள ஊராட்சிகளில் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட வேண்டும். ஊராட்சி மன்ற தீர்மானத்தின் அடிப்படையில் கோரப்படும் பணிகள் கால தாமதமின்றி மதிப்பீடு செய்யப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் செயலாளர் வள்ளியம்மாள்செல்வம், பொருளாளர் லெனின்குமார், கூட்டமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: