மோசடி குற்றவாளிகளுக்கும் பாஜ தலைமைக்கும் உள்ள உறவு குறித்து அண்ணாமலை விளக்கம் தர வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் பாஜ தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு ஊழல் பேர்வழிகள், சமூக விரோதிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பாஜவில் சேர்வது தொடர்ந்து நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பொருளாதார குற்றப்பிரிவினரால் பாஜவின் விளையாட்டு பிரிவு செயலாளராக இருந்த கே.ஹரிஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார். ரூ.2400 கோடி அளவிற்கு முதலீட்டாளர்களை மோசடி செய்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிற ஆருத்ரா தங்க வர்த்தக நிறுவனத்தின் இயக்குநர் தான் கே.ஹரிஷ். இவர், 2022 ஜூன் 2ம் தேதி பாஜவின் விளையாட்டுத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே பொருளாதார குற்றப்பிரிவு ஹரிஷ் மீது வழக்கு பதிவு செய்து தேடிக் கொண்டிருந்தது. மக்கள் பணத்தை மோசடி செய்தவர்களை பாஜ தலைமை ஏன் கட்சியில் சேர்க்கிறது. மோசடி குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஹரிஷ் என்பவருக்கும், தமிழக பாஜ தலைமைக்கும் உள்ள உறவு குறித்து அண்ணாமலை விளக்க வேண்டும். ஆணவத்தோடு அண்ணாமலை செயல்படுவாரேயானால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: