இயக்குநர் ஹரீஷை 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் பாஜ தலைவர்கள் சிக்குவார்களா? பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் துருவி துருவி விசாரணை

சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்களான ஹரீஷ் மற்றும் மாலதி ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி, லட்சக்கணக்கானோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், முதலீட்டாளர்களுக்கு பணத்தை நிறுவனம் திரும்ப செலுத்தவில்லை.

இதையடுத்து, பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகார் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், மேலாண் இயக்குனர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகினர். இந்நிலையில், அந்நிறுவனத்தின் இயக்குனரும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியுமான ஹரீஷ் மற்றும் மற்றொரு இயக்குனரான மாலதி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரம் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருணாநிதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பாபு ஆஜராகி, விசாரணை தொடர்ந்து நடத்திவருவதாலும், பலர் தலைமறைவாகியிருப்பதாலும் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது என்று வாதிட்டார்.

மனுவை விசாரித்த நீதிபதி ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குனர் ஹரீஷை 4 நாட்களும், மாலதியை ஒரு நாளும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் ஹரீசிடம் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அவரிடம், பாஜக பிரமுகர்களுக்கு பணம் கொடுத்தாரா? எவ்வளவு கொடுத்தார்? மோசடி பணத்தை என்ன செய்தார் என்பது குறித்து அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

Related Stories: