வட மாநில தொழிலாளர்கள், மாணவர்களை குறிவைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி உட்பட 2 பேர் கைது: 57 செல்போன்கள், பைக் பறிமுதல்

வேளச்சேரி: கோட்டூர்புரம், ரஞ்சித் சாலையை சேர்ந்தவர் அர்ஜூன்(18). இவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 19ம் தேதி மதியம் 12.30 மணியளவில் டியூசன் செல்வதற்காக தனது சைக்கிளில் அடையார், காந்திநகர் பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர், தனது செல்போன் பழுதாகிவிட்டது. அதனால் உங்கள் செல்போனை கொடுத்தால் என் நணபரிடம் பேசிவிட்டு தருகிறேன் என நைசாக பேசி,  செல்போனை பறித்துவிட்டுச் சென்றார்.

இதுகுறித்து அடையாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், அடையாறு  போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரன், செல்போன் கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். அடையாறு உதவி கமிஷனர் நெல்சன் தலைமையில், குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் பழைய குற்றவாளியான தண்டையார்பேட்டை, குமரன் நகர் பகுதியை  சேர்ந்த பாபு என்கிற பல்சர் பாபு(32) செல்போனை திருடி சென்றது தெரியவந்தது.

அவர் திருப்பதியில் உள்ள லாட்ஜில் தங்கி  இருப்பதும். 2 நாட்களுக்கு ஒருமுறை சென்னைக்கு பைக்கில் வந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது தனிப்படையினர் நேற்று முன்தினம் திருப்பதிக்கு சென்று பல்சர் பாபுவை கைது செய்தனர். விசாரணையில், பல்சர் பாபு கடந்த  6 வருடத்திற்கு முன் வடசென்னையில் கூலிப்படை தலைவனாக செயல்பட்டுள்ளார். அவ்வப்போது அடிதடி. வழிப்பறி மற்றும் சங்கிலி பறிப்பிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவர்மீது அண்ணா சாலை, மெரினா, முத்தியால்பேட்டை, ஏழுகிணறு, தேனாம்பேட்டை, திருவேற்காடு, விருகம்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் 12க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் இரண்டு  கால்கள், கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.  

அவரால் கூலிப்படை  தலைவனாக செயல்பட முடியவில்லை. பைக் நன்றாக ஓட்டத் தெரிந்ததால், 3 மாதங்களில் வேளச்சேரி, அடையாறு, கிண்டி ஆகிய காவல் நிலைய எல்லைக்குள் பைக்கில் சென்று, செல்போன் பேசியபடி செல்லும் வட மாநிலத்தவர், பள்ளி மாணவர்கள், சிறுவர்களை குறிவைத்து, செல்போனை பறித்து, பாரிமுனை, சைனா பஜாரில் உள்ள செல்போன் கடையில்  ₹2000 அல்லது ₹3500 க்கு விற்று, உல்லாசமாக செலவு செய்து வந்தது தெரியவந்தது.

அவர் கொடுத்த தகவலின்பேரில், பாரிமுனை, சைனா பஜாரில் உள்ள செல்போன் கடையில்  இருந்து 57 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ₹5 லட்சம் என கூறப்படுகிறது. கடையில் இருந்த எழும்பூர் பகுதியை சேர்ந்த ஆனந்த் (25) என்பவரை கைது செய்து, தலைமறைவான ஆனந்தின் அண்ணன் வினோத்தை தீவிரமாக தேடி வருகிறார்கள். இதையடுத்து, செல்போன் கொள்ளையன் பல்சர் பாபு, ஆனந்த் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: