கால்பந்து ஜாம்பவான்கள் பீலே, மரடோனா சிலைகளுக்கு பக்கத்தில் மெஸ்ஸிக்கு சிலை: கெளரவித்த தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு!

தென் அமெரிக்க: பீலே, மரடோனா சிலைகளுக்கு பக்கத்தில் மெஸ்ஸிக்கு சிலை வைத்து தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு கெளரவித்தது. கடந்த ஆண்டு டிசம்பரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கால்பந்து உலகக் கோப்பையை வென்றது. அது முதல் மெஸ்ஸி செல்லும் இடமெல்லாம் பாராட்டு மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், அவருக்கு நேற்று (27.03.2023) சிலை ஒன்றை தென் அமெரிக்க வழங்கி உள்ளது.

இந்த சிலை CONMEBOL-ன் அருங்காட்சியகத்தில் கால்பந்து உலகின் ஜாம்பவான்களான பீலே மற்றும் மரடோனாவுக்கு பக்கத்தில் வைத்து சிறப்பிக்க உள்ளதாகவும் தெரிகிறது. சுமார் 36 ஆண்டுகளுக்கு பின்னர் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்றிருந்தது. இந்த நிலையில், மெஸ்ஸியின் முழு உருவச் சிலை நேற்று திறக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினா அணி ஜெர்சி அணிந்துள்ள மெஸ்ஸி, கையில் உலகக் கோப்பையை தாங்கி நிற்பது போல இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மெஸ்ஸி பங்கேற்றுள்ளார். இதுகுறித்து மெஸ்ஸி பேசுகையில்; “நான் இதை ஒருபோதும் எண்ணி கூட பார்த்ததில்லை. சிறுவயதில் இருந்தே நான் தொழில்முறை கால்பந்து வீரராக இருக்க வேண்டும் என கனவு கண்டேன். அதையே செய்தேன். எனது பயணம் நீண்டது. தோல்வியை தழுவி உள்ளேன். ஆனால், வெற்றியை நோக்கி எனது எண்ணம் இருந்தது. அதற்காக களத்தில் சமர் புரிய வேண்டும். அதே நேரத்தில் ஆட்டத்தை அனுபவித்து ஆட வேண்டும்.

நாங்கள் மிகவும் சிறப்பான மற்றும் அழகான தருணத்தில் வாழ்ந்து வருகிறோம். அதீத அன்பைப் பெறுகிறோம். தென் அமெரிக்க அணி மீண்டும் உலகக் கோப்பையை வெல்லும் நேரம் இது” என மெஸ்ஸி தெரிவித்துள்ளார். மெஸ்ஸி, அர்ஜெண்டினா அணிக்காக இதுவரை 99 சர்வதேச கோல்களை பதிவு செய்துள்ளார். குராக்கோ அணிக்கு எதிராக அவர் இன்று கோல் பதிவு செய்தால் 100 கோல்களை பதிவு செய்த முதல் அர்ஜெண்டினா வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: