தூத்துக்குடியில் போலீஸ் சிஎஸ்ஆர் ரசீது தயாரித்த 5 பேர் கைது: மேலும் 4 பேருக்கு வலை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலீசார் அளிக்கும் மனு ஏற்பு ரசீது (சிஎஸ்ஆர்) போன்று போலியாக தயாரித்த கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்தவர் வந்தியதேவன் (64). இவர் தனது நிலத்திற்குரிய பத்திரம் தொலைந்து விட்டதால் அதற்கான நகல் பெற விரும்பியுள்ளார். இதற்காக தனது நண்பரான புதியம்புத்தூரை சேர்ந்த பொன்ராஜ் (60) என்பவரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரிடம் இருந்து கணிசமாக ஒரு தொகையை பெற்றுக்கொண்டுள்ள பொன்ராஜ் தனது நண்பர்களான அசோகன் (65), கிறிஸ்டோபர் (56), இம்மானுவேல், காளீஸ்வரன் (61) ஆகியோருடன் சேர்ந்து வந்தியதேவனிடம் ஒரு போலீஸ் மனு ஏற்பு ரசீதை கொடுத்துள்ளார்.

இதனை பெற்றுக் கொண்ட வந்திய தேவன் அதனை உண்மை என கருதி தென்பாகம் காவல் நிலையத்தில் கொடுத்து தனது தொலைந்த பத்திரத்தை முறைப்படி பெறுவதற்கான காவல்துறை சான்றிதழை கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதனை தென்பாகம் போலீசார் ஆய்வு செய்தபோது அது போலியானது என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், வந்தியதேவன் தெரிவித்த தகவலின் அடிப்படையில் பொன்ராஜ், அசோகன், கிறிஸ்டோபர், இம்மானுவேல், காளீஸ்வரன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் காவல் நிலையங்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்.இன்ஸ்பெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர், தாசில்தார்கள் உள்ளிட்டவர்களின் ரப்பர் ஸ்டாம்ப்களை தயாரித்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இந்த போலி மனுஏற்பு சான்றிதழை தயாரித்து பிரிண்ட் அவுட் எடுத்து வழங்கிய எட்டயபுரம் ரோட்டில் உள்ள இன்டர்நெட் சென்டர் உரிமையாளர் உள்ளிட்ட மேலும் 4 பேரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, போலி முத்திரைகள் தயாரித்து கொடுத்தவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கும்பல் இதுபோல் வேறு எங்கும் அரசு ஆவணங்களை போலியாக தயாரித்து பயன்படுத்தியுள்ளனரா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: