10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 507 வாக்குறுதிகளில் 269 மட்டுமே நிறைவேற்றம்: திமுகவின் 2 ஆண்டு ஆட்சியில் 85% நிறைவேற்றியிருப்பதாக அமைச்சர் பேச்சு.!

சென்னை: சட்டப்பேரவையில் இன்று, 2023-24ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல்வேறு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது, சில துறைகளுக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள். ஆனால், மாநில அரசு எந்த நிதியையும் குறைக்கவில்லை. ஒன்றிய அரசு, நேரடியாக மாணவர்களுக்கு வழங்கும் நிதியை அவர்களது வங்கி கணக்கிலேயே செலுத்துவதால், இந்த குறைவு காணப்படுகிறது. ஆனால் உண்மையில், கூடுதலாக ரூ.70 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, அதிமுக உறுப்பினர்கள் பேசும்போது, அவர்கள் ஆட்சிக் காலத்தில் அறிவித்த திட்டங்களை ரத்து செய்து விட்டதாக கூறினார்கள். ரத்து செய்யப்படவில்லை. சில திட்டங்களை திருத்தியிருக்கிறோம்.

குறிப்பாக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மாற்றி, புதுமைப் பெண் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது அவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் 2011 தேர்தல் அறிக்கையில் 184 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. 2016ம் ஆண்டு 320 வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. மொத்தம் 507 வாக்குறுதிகளில் 269 வாக்குறுதிகளுக்கு மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் தேர்தலின்போது அளிக்கப்பட்டு வாக்குறுதிகளில் 85 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம். இன்னும் 3 ஆண்டுகள் எங்கள் ஆட்சி இருக்கிறது. ஆனால், அதிமுக செயல்படுத்தாமல் விட்டுச் சென்ற 269 வாக்குறுதிகளை எதுவுமே செய்ய முடியாது. அனைவருக்கும் கைபேசி, மதுரையில் தமிழ்தாய் சிலை உள்ளிட்ட அறிவிப்புகளை அப்படியே கிடப்பில் போட்டு விட்டு போய்விட்டார்கள். ஆனால், நாங்கள் சொல்லாததையும் எங்கள் முதல்வர் செய்து காட்டியிருக்கிறார். அதற்கு உதாரணமாக காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் என பல்வேறு திட்டங்களை குறிப்பிடலாம்.

அதிமுக ஆட்சியில் 110வது விதியின் கீழ், ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்து 167 கோடி அளவுக்கு 1704 திட்டங்களை அறிவித்தார்கள். ஆனால், இதில் வெறும் 87,405 கோடியில் 27 சதவீதம் அளவுக்கே அவர்களால் செயல்பட முடிந்தது. அதிமுக அறிவித்து, செயல்படுத்தாத திட்டங்களையும் நாங்கள் செயல்படுத்தியிருக்கிறோம். வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறையை இந்த அளவுக்கு எந்த மாநிலமும் குறைக்கவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மாற்றத்தை இந்த 2 ஆண்டுகளில் கொண்டு வந்துள்ளோம். அதிக அளவு கடன் வாங்கினால், பண வீக்கம் அதிகரிக்கும். பண வீக்கத்தை அதிகரித்தால், அது சமூக நீதிக்கு செய்யும் துரோகம் ஆகும். நாம் செலவு செய்யும்போது, யாருக்கு இந்த திட்டம் என்பதை யோசித்து கடன் வாங்க வேண்டும். நாடு வளர வேண்டும் என்றால் மாநிலம் வளர வேண்டும். அதனால், அரசியலுக்கு அப்பாற்பட்டு, அனைவரும் இணைந்து செயல்பட்டால், தமிழகம் இன்னும் அதிக வளர்ச்சி அடையும். இவ்வாறு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

Related Stories: