கேரளாவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏப்.1-ம் தேதி கொண்டாட ஏற்பாடு: ஈரோட்டில் இருந்து வாகனப் பேரணி தொடக்கம்

ஈரோடு: வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவையொட்டி தந்தை பெரியாரின் பங்களிப்பை நினைவு கூறும் வகையில் ஈரோட்டில் இருந்து வாகனப் பேரணி தொடங்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் கேரளாவில் நடைபெற்ற மிகமுக்கியமான போராட்டம் வைக்கம் போராட்டம். அங்குள்ள மகாதேவி கோவிலிலும் அதனை சுற்றியுள்ள தெருக்களிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நுழைவதற்கு அப்போது அனுமதிக்கப்பட வில்லை.

இதனை எதிர்த்து 1924-ல் தந்தை பெரியார் கலந்து கொண்ட நீண்ட போராட்டம் இறுதியில் வெற்றியில் முடிந்தது. அதன் நூற்றாண்டு விழாவை வரும் ஏப்ரல் 1-ம் தேதி சிறப்பாக கொண்டாட கேரளா அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், பெரியாரின் பங்களிப்பை போற்றும் விதமாக அவர் பிறந்த ஈரோட்டில் இருந்து வாகன பேரணி தொடங்கப்பட உள்ளது.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கொடியசைத்து இந்த பேரணியை தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய அழகிரி வைக்கத்தின் நினைவுகளை மீண்டும் இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதேபோன்று வேறு சில இடங்களில் இருந்தும் வைக்கம் நோக்கி வாகனப்பேரணி தொடங்கப்பட்டுள்ளது. கோட்டையம் அருகே உள்ள வைக்கத்தில் நடக்கும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Related Stories: