சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிக்கு ரூ.1,482 கோடி ஒதுக்கீடு: சாலை அமைக்க ரூ.881 கோடி

சென்னை: சென்னை மாநகராட்சியின் 2023-24ம் நிதியாண்டிற்கான மூலதனப் பணிகளை மேற்கொள்ள ரூ.3,560.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக மழைநீர் வடிகால் பணிக்கு ரூ.1,482 கோடியும், சாலை அமைக்க ரூ.881 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் நேற்று காலை ரிப்பன் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும், வரிவிதிப்பு நிலைக்குழு தலைவர் சர்பஜெயா தாஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு துறைகள் மூலமாக மூலதனப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மூலதனப்பணிகளுக்காக 2023-24ம் நிதியாண்டில் ரூ.3,560.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பேருந்து சாலைகள்: தமிழ்நாடு அரசின் சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகளுக்காக ரூ.881.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால்கள்: கொசஸ்தலையாறு பகுதி - ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன், கோவளம் பகுதி - ஜெர்மன் வங்கி நிதி உதவுயுடன், சீர்மிகு நகர்த்திட்டம் நிதி, அம்ரூட் 2.0 நிதி, மாநில பேரிடர் தடுப்பு நிதி உள்ளிட்ட திட்டங்களின் வாயிலாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக மொத்தம் ரூ.1,482.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மை: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர தூய்மை பணிக்கு தேவையான தளவாட பொருட்களை கொள்முதல் செய்தல், குப்பை கொட்டும் கிடங்குகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளுதல் மற்றும் இதர பணிகளுக்காக ரூ.260.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாலங்கள்:  உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி மற்றும் மூலதன மான்யம் நிதி மூலமாக புதிய பாலங்கள் கட்டுமான பணிகள் மற்றும் பாலங்கள் விரிவுப்படுத்தும் பணிகளுக்காக ரூ.102.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கட்டிடம்:  பெருநகர சென்னை மாநகராட்சியில், எம்யூஎச்எம் திட்டம், சிங்கா சென்னை-2.0 திட்டம், உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி, தூய்மை இந்தியா திட்ட நிதி ஆகியவற்றினை கொண்டு நகர்ப்பு சுகாதார மையங்கள், கழிப்பறைகள், வாகன பணிமனை கட்டுதல், பள்ளிகளுக்கு தேவையான கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல், வணிக வளாகங்கள் கட்டுதல் மற்றும் ஏனைய பிற பணிகளுக்காக ரூ.104.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நிர்பயா திட்ட நிதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதி ஆகியவற்றின் மூலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளில் புதிய தெரு மின்விளக்குக் கம்பங்கள் அமைக்கும் பணிகளுக்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர தூய்மை பணிக்கு தேவையான வாகனங்களை நிர்பயா திட்டம் மற்றும் தூய்மை இந்தியா திட்ட நிதியின் கீழ் கொள்முதல் மேற்கொள்ள ஏதுவாக ரூ.71.29 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிட சிங்கார சென்னை -2.0 திட்டத்தின் கீழ் கட்டிடத் துறையில் ஒதுக்கப்பட்டள்ள நிதி ரூ.55 கோடியிலிருந்தும் மற்றும் சிறப்பு திட்டங்கள் துறையால் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டள்ள ரூ.43 கோடியிலும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மாநகராட்சி பள்ளிகளுக்கு தேவையான கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.4 கோடி கட்டிடத் துறையில் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேவையான சாய்வு இருக்கைகள், ஆய்வுக்கூட உபகரணங்கள், கம்ப்யூட்டர் சார்ந்த உபகரணங்கள், வலைதள அமைப்புகள் போன்ற பணிகளை மேற்கொள்ள ரூ.7.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

என்யூஎச்எம் திட்ட நிதியின் கீழ் கட்டத் துறையில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.24 கோடியிலிருந்து சுகாதாரத் துறைக்கான கட்டிடங்கள் கட்டப்படும். மாநகராட்சியின் பரிசோதனை கூடங்களை நவீனப்படுத்துதல், நாய் மற்றும் மாடு பிடிக்கும் வாகனங்கள் கொள்முதல் மற்றும் கொசு ஒழிப்பு பணிக்கான புகைபரப்பும் இயந்திரம் கொள்முதல் செய்ய ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நவீனப் படுத்தப்பட்ட மகப்பேறு மருத்துவமனைகள் கூடுதலாக தேவைப்படும் அறுவை சிகிச்சை அரங்க உபகரணங்கள் இதர உபகரணங்கள் கொள்முதல் செய்ய ரூ.70 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி, சீர்மிகு நகரத்திட்டம், சிட்டீஸ் திட்டம், நிர்பயா திட்டம், சிங்கார சென்னை 2.0 திட்டம், சென்னை மாநகர பங்களிப்பு திட்டம் போன்ற பல்வகை நிதி ஆதாரங்களை கொண்டு மூலதன பணிகளை மேற்கொள்ள ரூ.313.45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: