அஸ்தினாபுரம், கீழ்கட்டளை பகுதியில் துணை மின்நிலையம் அமைக்கும் பணிகள் எப்போது தொடங்கும்?...பேரவையில் இ.கருணாநிதி எம்எல்ஏ கேள்வி

தாம்பரம்: அஸ்தினாபுரம், கீழ்கட்டளை பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் எப்போது தொடங்கும் என்று சட்டமன்றத்தில் பல்லாவரம் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டமன்றத்தின் கேள்வி நேரத்தில், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி பேசியதாவது: பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனகாபுத்தூர், பம்மல், பொழிச்சலூர் பகுதியில், 33 கே.வி துணை மின் நிலையம் ரூ.48 கோடியில் மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர், மின்சாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அஸ்தினாபுரம், கீழ்கட்டளை பகுதியில் துணை மின் நிலையத்திற்கு இடம் கையகப்படுத்தப்பட்டு, டெண்டர் கோரப்படுகிற நிலையில் உள்ளது. எனவே, அந்த பணிகள் எப்போது துவங்கப்படும்.

அமைச்சர் செந்தில்பாலாஜி: சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையின்படி, நிலம் கண்டறியப்பட்டு, மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. இப்போது, துறையின் சார்பாக அதற்கு மதிப்பீடுகள் தயார் செய்யப்படுகின்ற பணிகள் நடைபெற்று வருகிறது. மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்ட பிறகு பணிகள் தொடங்கப்படும். அவர் தொகுதியில் ஒன்று மட்டுமல்ல, 3 துணை மின் நிலையங்களை அமைப்பதற்கு, தமிழ்நாடு முதல்வர் அனுமதி அளித்திருக்கிறார் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Related Stories: