ரூ.8 கோடி சிக்கிய வழக்கில் கர்நாடக பாஜ எம்எல்ஏ கைது

பெங்களூரு: லஞ்ச புகாரில் சிக்கிய கர்நாடக பாஜ எம்எல்ஏ மாடால் விருபாட்சப்பா நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். கர்நாடக சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட் நிறுவன அலுவலகத்தில்  தனியார் நிறுவன பங்குதாரரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, பெங்களூரு குடிநீர் வாரிய அதிகாரியும் பாஜ எம்எல்ஏ மாடால் விருபாட்சப்பாவின் மகனுமான பிரசாந்த் மாடாலை லோக்ஆயுக்தா போலீசார் கடந்த 2ம் தேதி கைது செய்தனர். அவரது வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ரூ.8.10 கோடி பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்கள், சொத்துகளின் ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.

இவ்வழக்கில் பிரசாந்த் மாடாலை லோக்ஆயுக்தா போலீசார் கைது செய்தனர். எம்எல்ஏ மாடால் விருபாட்சப்பா பல்வேறு நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் பெற்றார். ஆனால் லோக்ஆயுக்தா விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்காததால் இவரது முன் ஜாமீனை ரத்து செய்ய கோரி லோக்ஆயுக்தா சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையேற்ற கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று அவரது முன்ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. முன்ஜாமீன் ரத்து செய்த நிலையில் துமகூரு டோல்கேட் அருகே காரில் சென்று கொண்டிருந்த எம்எல்ஏ மாடால் விருபாட்சப்பாவை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

Related Stories: