மயாமி ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் குவித்தோவா: அல்கரஸ் முன்னேற்றம்

மயாமி: அமெரிக்காவில் நடக்கும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, செக் குடியரசு வீராங்கனை பெத்ரா குவித்தோவா தகுதி பெற்றார். 3வது சுற்றில் குரோஷியாவின் டோனா வேகிச்சுடன் (26 வயது, 20வது ரேங்க்) மோதிய குவித்தோவா (33 வயது, 12வது ரேங்க்), 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் டோனா கடும் நெருக்கடி கொடுக்க ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது. அதில் அபாரமாக விளையாடி புள்ளிகளைக் குவித்த குவித்தோவா 6-4, 7-6 (7-3) என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 39 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு 3வது சுற்றில் கனடா நட்சத்திரம் பியான்கா ஆண்ட்ரீஸ்கு 6-4, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் சோபியா கெனினை வீழ்த்தினார். செக் குடியரசு வீராங்கனைகள் மேரி பவுஸ்கோவா, பார்போரா கிரெஜ்சிகோவா, மார்கெடா வோண்ட்ருசோவா, பெலாரஸ் நட்சத்திரம் அரினா சபலெங்கா, சொரானா சிர்ஸ்டியா (ருமேனியா), வர்வரா கிரசேவா (ரஷ்யா) ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

இதே தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் களமிறங்கிய நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்கரஸ் (ஸ்பெயின்) 6-0, 7-6 (7-5) என்ற நேர் செட்களில் செர்பியாவின் டுசான் லாயோவிச்சை வீழ்த்தினார். முன்னணி வீரர்கள் டேனில் மெத்வதேவ், ஆந்த்ரே ருப்லேவ் (ரஷ்யா), டெய்லர் பிரிட்ஸ், டாமி பவுல் (அமெரிக்கா), யானிக் சின்னர் (இத்தாலி) ஆகியோரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நுழைந்துள்ளனர்.

Related Stories: