முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மின்னல் வேகத்தில் பணிகள் நடைபெறுகிறது

ஈ.ராஜா எம்எல்ஏ: தெப்பம் உள்ள இடம், சங்கரன்கோவில் நகரமன்றத்திற்கு சொந்தம். அதனை சங்கர நாராயண சுவாமி கோயில் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.

அமைச்சர் பி.கே.சேகர் பாபு: சங்கர நாராயண சுவாமி கோயிலில் தெப்ப குளத்தை செப்பனிடுவதற்கு ரூ.90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தம் கோரப்பட்டிருக்கின்றது. ‘தை’ மாதத்தில் அந்தத் தெப்பக் குளத்தில் தெப்பம் விடுகின்ற நல்ல சூழ்நிலையை இந்து சமய அறநிலையத் துறை மேற்கொள்ளும். இந்த ஆட்சி மின்னல் வேக ஆட்சி, முதல்வரின் ஆட்சி மின்னல் வேகத்தில் பணியாற்றுகிறது என்பதற்கு இந்தத் தெப்பக்குளப் பணிகளை மேற்கொள்வதே ஒரு சான்றாக இருக்கின்றது.

* அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல் புதிய பஸ்கள் வழங்குவதில் கிராமங்களுக்கு முன்னுரிமை

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது திருத்தணி தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.சந்திரன் புதிய பஸ்கள் குறித்து பேசினார். இதற்கு பதில் அளித்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ‘‘போக்குவரத்து கழகங்களைப் பொறுத்தவரை பெரியளவில் நிதி நெருக்கடியில் இருக்கிறது. அதேபோல், கடன்சுமையும் பெருமளவில் உள்ளது. இருப்பினும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த இடைநிலை நிதிநிலை அறிக்கையில் புதிய ஆயிரம் பேருந்துகளை வாங்குவதற்கும், இந்த நிதிநிலை அறிக்கையில் புதிய ஆயிரம் பேருந்துகளை வாங்குவதற்கும் அனுமதி அளித்திருக்கிறார். முதற்கட்டமாக அவசிய தேவை என்பது, கிராமப்புற மக்களுக்கான பேருந்துகள் வழங்குவது. அதற்கான நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். உறுப்பினர் கோரிக்கை வைத்தது போல், இன்னும் பல பணிமனைகளில் அதுபோன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டிய அவசியமிருக்கிறது.

* மாநில எல்லைகளில் உள்ள கிராமங்களின் பெயர்களை பழையபடி மாற்ற ஜி.கே.மணி கோரிக்கை

பேரவையில் நிதிநிலை அறிக்கையின் மீது பாமக சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே.மணி பேசியதாவது: வேளாண் நிதிநிலை அறிக்கையில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் புளி உற்பத்தி கேந்திரமாக விளங்கும் பாப்பாப்பட்டி கிராமத்தையும் சேர்க்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் கட்டாய தமிழ்க் கல்வி பாடத்திட்டம் என்ற அரசாணையை கட்டாயமாக்க வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு உயர்கல்விக்கு செல்லும் போது முன்னுரிமை வழங்க வேண்டும். வணிக நிறுவனங்கள் பெயர்கள் தமிழில் எழுத வேண்டும். மாநிலத்தை ஒட்டிய பகுதிகளில் உள்ள கிராமங்களின் பழைய பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. அவை பதிவேடுகளில் உள்ளபடி பழையபடியே மாற்ற வேண்டும்.  மதம் மாறிய கிறிஸ்தவர்கள் பட்டியலில் உள்ள ஆதிதிராவிடர்களுக்கு உரிய சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

* ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேல்முருகன் கோரிக்கை

தமிழக வாழ்வுரிமைக் கட்சி எம்எல்ஏ வேல்முருகன் பேசியதாவது: பண்ருட்டி தொகுதியில் முந்திரி, பலா உள்ளிட்ட கனி வகைகள் உற்பத்தி அதிக அளவில் இருப்பதை கருத்தில் கொண்டு பழங்களை மதிப்புக்கூட்டும் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் அதிக அளவில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மேலும் 10.5 சதவீத இட ஒதுக்கீடு முறையாக கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களை விடுவித்து ஒன்றிய அரசின் ஒப்புதல் பெற்று அவர்கள் விரும்பிய நாடுகளுக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லிக்குப்பம் பகுதியில் மருத்துவமனை கொண்டு வர வேண்டும். இவ்வாறு வேல்முருகன் பேசினார்.

Related Stories: