வாலிபரின் பற்களை உடைத்ததாக புகார் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: வழக்கு ஒன்றில் வாலிபரை கடுமையாக தாக்கி பற்களை உடைத்த அம்பாசமுத்திரம் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கை அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட வாலிபரை கடுமையாக தாக்கியும், வாலிபரின் வாயில் கற்களை போட்டு தாக்கி பற்களை உடைத்ததாகவும் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், பாதிக்கப்பட்ட வாலிபர் நெல்லை மாவட்ட கண்காணிப்பாளரிடம், தன்னை உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் தாக்கியதில் பற்கள் உடைந்துவிட்டதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனுவும் அளித்தார்.

இதுகுறித்து மாவட்ட கண்காணிப்பாளர் டிஜிபி கவனத்திற்கு கொண்டு சென்றார். அதைதொடர்ந்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த டிஜிபி உத்தரவிட்டார். அதன்படி உயர் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வாலிபர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கிடம் விசாரணை நடத்தியதில், வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபரை சட்ட விதிகளை மீறி கடுமையாக தாக்கியதால் அவரது பற்கள் உடைந்தது தெரியவந்தது. பின்னர், உயர் அதிகாரிகள் தங்களது விசாரணை அறிக்கையை டிஜிபியிடம் கொடுத்தனர். அதைதொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு உயர் அதிகாரிகளின் அறிக்கையின்படி அம்பாசமுத்திரம் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கை அதிரடியாக பணியில் இருந்து விடுவித்து, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். மேலும், தெற்கு மண்டல ஐஜி, பல்வீர் சிங் இடத்திற்கு வேறு ஒரு அதிகாரியை நியமிக்கும் வரை கூடுதல் பொறுப்பாக மாற்று அதிகாரி ஒருவரை நியமிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: