கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் க்ஷத்திரிய நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி திருவிழா, ஆண்டுதோறும் 15 நாட்களுக்கு மேல் நடைபெறும். அதன்படி கடந்த மாதம் கோயிலின் வடக்குவாசல் முன்பு முகூர்த்தகால் நடப்பட்டு, திருவிழாவிற்கான, அனைத்து பணிகளும் நடைபெற்று வந்தன. நேற்று பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு கோயிலில் இருந்து நந்தவனத்துக்கு சென்று பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் நேற்று காலை மேளதாளங்களுடன் சென்று கொடிப்பட்டம் வாங்கி கோயிலுக்கு கொண்டு வந்தனர். அதன்பின்பு காலை 9 மணிக்கு மேல் முத்துமாரியம்மன் சிலைக்கு முன்பு உள்ள கொடிமரத்தில், கொடி ஏற்றப்பட்டது. பின்பு அதில் ஏராளமான மூலிகைகள், திரவியப்பொடி, பன்னீர், இளநீர் உட்பட பல்வேறு வகைகள் கொண்டு, அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அம்மனுக்கு காப்பு கட்டிய பின்பு, நேர்த்திக்கடன் செலுத்தும்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புகட்டிக்கொண்டனர். பின்னர் இரவு கும்பம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

14 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று, அம்மன் ரிஷபம், பூதம், யானை, அன்னப்பறவை, கேடயம், வெள்ளிக்குதிரை காமதேனு உட்பட ஏராளமான வாகனங்களில் நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 4ம்தேதி செவ்வாய்க்கிழமை பொங்கல் திருவிழாவும், 5ம் தேதி அக்னிச்சட்டி திருவிழாவும் நடைபெறுகிறது. 7ம் தேதி 2008 திருவிளக்கு பூஜை நடக்கிறது. 8ம் தேதி முளைப்பாரி திருவிழாவுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளையும் க்ஷத்திரிய நாடார் உறவின்முறையினர் செய்து வருகின்றனர்.

Related Stories: