கொரோனா 7 நாளில் 78% அதிகரிப்பு: நாடு முழுவதும் ஏப். 10, 11ல் தடுப்பு ஒத்திகை

புதுடெல்லி: கடந்த 7 நாளில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 78 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், வரும் ஏப். 10, 11ம் தேதியில் கொரோனா தடுப்பு ஒத்திகைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரபடி புதியதாக 1,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த பாதிப்பானது கடந்த 210 நாட்களில் ஒரே நாளில் அதிகபட்ச பாதிப்பாகும். கடந்த ஏழு நாட்களில் ஏற்பட்ட பாதிப்புகளின்படி பார்த்தால் கிட்டத்தட்ட 78 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் 19 முதல் 29 இறப்புகள் வரை அதிகரித்துள்ளன. கடந்த ஆறு வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், கடந்த ஏழு நாட்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மார்ச் 19 முதல் 25 வரை 1,956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரியானா, டெல்லி, உத்தரபிரதேசம், குஜராத், இமாச்சல பிரதேசம், கோவா போன்ற மாநிலங்களில் தொற்று பரவல் அதிகமாகி வருகிறது. அதனால் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 10 மற்றும் 11ம் தேதிகளில் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்த மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒன்றிய சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளது.

ஒரே பள்ளியில் 38 மாணவியருக்கு பாசிடிவ்: உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டம் மிடாலி பகுதியில் செயல்படும் கஸ்தூரிபா உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து வரும் 38 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து லக்கிம்பூர் கேரி தலைமை மருத்துவ அதிகாரி சந்தோஷ் குப்தா கூறுகையில், ‘கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளியின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டது. அதனை ெதாடர்ந்து மாணவிகளுக்கு தொற்று பரவியுள்ளது. பள்ளிக்கு மருத்துவக் குழுவினர் விரைந்துள்ளனர். 92 மாணவிகளை பரிசோதித்ததில், 38 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்’ என்றார்.

Related Stories: