ஒரே மேடையில் பாஜக எம்பி, எம்எல்ஏவுடன் பலாத்கார குற்றவாளி: திரிணாமுல் எம்பி காட்டம்

கொல்கத்தா: ஒரே மேடையில் பாஜக எம்பி, எம்எல்ஏவுடன் பலாத்கார குற்றவாளி அமர்ந்திருந்த புகைப்படத்தை வெளியிட்ட திரிணாமுல் எம்பி, காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார். குஜராத்தை சேர்ந்த பில்கிஸ் பானோவை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய 11 பேரில் ஒருவரான ஷைலேஷ் சிமன்லால் பட் என்பவர் குஜராத் மாநிலம் தாஹோத் என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அந்த கூட்டத்தில் பாஜக எம்பி ஜஸ்வந்த் சின் பாபோர், எம்எல்ஏ ஷைலேஷ் பாபோர் ஆகியோரும் இருந்தனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, அந்த புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவில், ‘பாலியல் பலாத்கார குற்றவாளி ஒருவர், குஜராத்தின் பாஜக எம்பி, எம்எல்ஏவுடன் சமமாக அமர்ந்துள்ளார். இந்த அரக்கர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட வேண்டும். அதனை நான் பார்க்க வேண்டும். இந்தியா தனது தார்மீக பாதையை மீட்டெடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: