மின்சாரம் பாய்ந்து மணமகளின் அம்மா பலி: தாயாக இருந்து உன்னை கவனிப்பேன் மணமேடையில் மாப்பிள்ளை உருக்கம்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் மகளுக்கு இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில், நேற்று மின்சாரம் பாய்ந்து தாய் இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இரவோடு இரவாக  தகனம் செய்யப்பட்டது. இதற்கிடையே இன்று காலை மிகுந்த சோகத்துடன் திட்டமிட்டபடி திருமணம் நடைபெற்றது. அப்போது மணமேடையில் உனக்கு தாயாக இருந்து கவனிப்பேன்... கலங்காதே என்று மணமகன் கூறியது அனைவரையும் நெஞ்சுருக வைத்தது. நாகர்கோவில் கீழ பெருவிளையை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி சாந்தி (51). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகள் பொன் பிரதீஷாவுக்கும், எள்ளுவிளையை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இன்று (27ம்தேதி) திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. திருமண ஏற்பாட்டில் மணமகள் குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர்.

அதன்படி 2 நாட்களுக்கு முன்பே உறவினர்கள் குவிந்தனர். மகள் திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்களை சாந்தி நன்றாக கவனித்து வந்தார். நேற்று மதியம் வீட்டில் உள்ளவர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக சாந்தி கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிரைண்டரில் மின்சாரம் பாய்ந்தது. இதில் சாந்தி தூக்கி வீசப்பட்டு மயக்கம் அடைந்தார். உடனே சாந்தியை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சாந்தியை பரிசோதித்த டாக்டர் சாந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் மணமகள் உள்பட குடும்பத்தினர் கதறி அழுதனர். கலகலப்பாக மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்த திருமண வீடு மட்டுமல்ல, அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

மணமகன் வீட்டாருக்கும் தகவல் தெரிந்து அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆசாரிப்பள்ளம் போலீசார் தகவல் அறிந்து வந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, சாந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஊர் பிரமுகர்கள், உறவினர்கள் கூடி நிச்சயிக்கப்பட்ட திருமணம் நிற்க வேண்டாம். சாந்தியின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமென்றால், இந்த திருமணம் நிச்சயம் நடக்க வேண்டும். எனவே திருமணத்தை திட்டமிட்டப்படி நடத்துவோம். சாந்தியின் உடலை பிரேத பரிசோதனை செய்து இரவோடு இரவாக தகனம் செய்து விடுவோம் என்று முடிவு செய்தனர். இதற்கிடையே மாலை 6 மணி வரை ஆனதால், பிரேத பரிசோதனை நடக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. உடனே ஊர் பிரமுகர்கள் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளை தொடர்பு கொண்டனர்.

இதையடுத்து மாநகராட்சி மேயர் மகேஷ் கவனத்துக்கும் இந்த விவகாரம் சென்றது. உடனே மருத்துவமனைக்கு விரைந்து வந்த அவர் மருத்துவ அதிகாரிகள், காவல்துறையினரை தொடர்பு கொண்டு இரவோடு, இரவாக பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். இளம்பெண்ணின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. மகள் திருமணத்துக்காக இறந்து போன சாந்தி மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார். எனவே திருமணம் நிற்க கூடாது. இரவே பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்றார். இதையடுத்து பிரேத பரிசோதனை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆசாரிப்பள்ளம் போலீசார் உடனே வழக்கு பதிவு செய்து, பிரேத பரிசோதனைக்காக நடவடிக்கைகளை எடுத்தனர். பின்னர் இரவு 9 மணிக்கு பிரேத பரிசோதனை நடைபெற்றது.

அதன் பிறகு உடல் ஒப்படைக்கப்பட்டு, இறுதி சடங்கு நடந்தது. தொடர்ந்து புளியடியில் உடல் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று காலையில் திட்டமிட்டப்படி திருமணம் நடைபெற்றது. உனக்கு தாயாகவும் இருந்து கவனித்துக் கொள்வேன். நீ கலங்காதே என்று கண்ணீருடன் மணமேடையில் நின்ற மணமகளுக்கு மணமகன் ஆறுதல் கூறினார். அதைப்பார்த்த மற்றவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: