நாகலோகத்தில் இருந்து வந்ததாக கூறி மக்களிடம் கண்ணாடி கற்களை கொடுத்து பணம் வசூலித்து மோசடி செய்யும் சாமியார்:குமரியில் பரபரப்பு: எஸ்பியிடம் புகார்

நாகர்கோவில்: நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடை அருகே ஒரு கோயில் அமைத்து சாமியார் ஒருவர் குறி சொல்லி வருகிறார். அவர் நாகலோகத்தில் இருந்து வந்ததாக கூறி வருகிறார். நாங்களும் அவரை நம்பி எங்களின் குடும்ப பிரச்சினைகளை சொல்லி குறிகேட்டு வந்தோம். அதற்காக ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்தோம்.

பின்னர் தான் இவர் பெரிய மோசடி பேர்வழி என்பது தெரிய வந்தது. இந்த சாமியார் தன்னை எதிர்த்தவர்களை தெய்வீக சக்தியால் கொன்றதாகவும் கூறி வருகிறார்.  இவர் அந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தெய்வம் கொடுப்பது போல் நடித்து பூக்களுக்குள் மறைத்து வைத்து பல வண்ண கற்களை எடுத்து மக்களிடம் வழங்கி, ‘‘இவை நாக தெய்வங்கள் எனக்குத் தந்த மாணிக்க கற்கள், விலை உயர்ந்தவை. அவற்றை உங்களுக்குத் தருகிறேன்’’ எனக்கூறி பணம் வசூலித்து வருகிறார்.

இந்த கற்களை நகைக்கடைகளில் கொண்டு சென்று சோதித்தபோது, அவை சாதாரண கண்ணாடி கற்கள் என தெரியவந்தது. மேலும், பாம்புகள் தன்னுடன் வசிப்பதாகவும் தான் தங்குமிடத்தில் ஏராளமான பாம்புகள் உள்ளதாகவும் அவை நள்ளிரவில் மாணிக்க கற்களை கக்கிவிட்டு செல்வதாகவும் கதை அடிக்கிறார். இந்தக் கற்களை அவர் பல ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்று வருகிறார்.

மாதந்தோறும் ஆயில்யம் நட்சத்திர நாளில் நடைபெறும் நாக சிலைக்கு பால் அபிஷேகம் செய்யும் போது நீல நிறம் கலந்து பால் வரும். அதை நாக விஷம் என்று  கூறுவதோடு, பொதுமக்கள் முன்னிலையில் அந்த பாலை குடித்து, விஷம் குடித்தும் உயிரோடு இருப்பதாக ஏமாற்றி வருகிறார்.

அதோடு ரயில்வே துறையிலும் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் மூன்று லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.  இவ்வாறு புகார் மனுவில் கூறி உள்ளனர்.

Related Stories: