நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா: ஒன்றிய சுகாதார செயலாளர் இன்று மாலை ஆலோசனை

டெல்லி: கொரோனா அதிகரிப்பு காரணமாக மாநிலங்களின் சுகாதார செயலாளர்களுடன் ஒன்றிய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார். தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 153 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா தயார்நிலை குறித்து நேற்றைய தினம் தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. ஒத்திகையின் போது ஆம்புலன்ஸ், அவசரகால சேவைகள், கோவிட் வார்டுகள், ஆக்ஸிஜன் மற்றும் வேண்டிலேட்டர் இருப்பு உள்ளிட்டவை உறுதி செய்யப்பட்டது.

டெல்லி அரசு மருத்துவமனைகளில் ஒன்றான லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் மருத்துவமனையில் 2000 படுகைகளில் 450 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஆக்ஸிஜன் வசதி கொண்டவை என்றும் தற்பொழுது இங்கு 2 கொரோனா நோயாளிகள் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பு ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும், குறைபாடுகள் நீக்கப்படும் என்றும் டெல்லி சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், கட்டுப்பாடுகள் தொடர்பான பெரிய நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநிலங்களின் சுகாதார செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஒன்றிய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று மாலை காணொளி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா மீண்டும் வேகமாக பரவுவதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: