வருசநாடு பகுதி முருங்கை கீரைக்கு வெளிமாநிலங்களில் கடும் கிராக்கி: கிலோ ரூ.85க்கு விற்பனை

வருசநாடு: தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், ேதனி மாவட்டத்தில் வேளாண் துறை மேம்படுவதற்கு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முருங்கை சாகுபடி அதிகளவில் நடக்கும் மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், அரியலூர், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களை ஒருங்கிணைத்து முருங்கை ஏற்றுமதி மண்டலமாக முதல்வர் அறிவித்துள்ளார். முருங்கையில் இரும்புச்சத்து உள்பட பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் முருங்கைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே ஏற்றுமதிக்கான முருங்கை சாகுபடி தொழில்நுட்பங்களை அறிந்து அதிகளவில் விவசாயிகள் முருங்கை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வருசநாடு பகுதியில் உள்ள தங்கம்மாள்புரம், முருக்கோடை, உப்புத்துறை, கருப்பையாபுரம், மூலக்கடை, சோலைதேவன்பட்டி, பின்னதேவன்பட்டி, வாலிப்பாறை, அண்ணாநகர், ராஜேந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் 150 மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக நல்லமழை பெய்து வருகிறது. ‌இதனால் இப்பகுதி விவசாயிகள் முருங்கை சாகுபடியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். அதுபோல், கடமலை - மயிலை ஒன்றியத்துக்குட்பட்ட கண்டமனூர், எட்டப்பராஜபுரம், கணேசபுரம், கோவிந்தநகரம் , கடமலைக்குண்டு, பாலூத்து, கொம்புகாரன்புலியூர், அய்யனார்கோவில், அய்யனார்புரம், டாணாதோட்டம், அண்ணாநகர், ஆத்தங்கரைபட்டி, லட்சுமிபுரம், மயிலாடும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் முருங்கை மரங்கள் அதிகம் உள்ளன. தற்போது இம்மரங்களில் இருந்து முருங்கை இலைகளை மூலிகைக்கு பறிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளார்கள்.

இதன்படி தற்போது ஒரு கிலோ முருங்கை இலையின் விலை உயர்ந்தள்ளதாக விவசாயிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன்படி முருங்கை இலையை மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் தேனி, ஆண்டிபட்டி, கம்பம், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விலைக்கு வாங்கி பதப்படுத்தி வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கடமலை - மயிலை ஒன்றியத்தில் முருங்கை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் முருங்கை இலைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் உள்ளது. இதற்காக முருங்கை இலைகள் பறிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு இருக்கின்றனர். இதன் காரணமாக தற்போது தனி மனித வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த முருங்கை இலை உதவிகரமாக உள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கடமலைக்குண்டு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், கடமலை-மயிலை ஒன்றியத்திலிருந்து தினமும் சுமார் 10க்கும் மேற்பட்ட லாரிகளில் முருங்கைக்காய் வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் விவசாய நிலத்திற்கு நாங்கள் நேரடியாக சென்று முருங்கை சாகுபடி குறித்து விழிப்புணர்வு செய்து வருகிறோம், என்றனர். பின்னர் முருங்கை விவசாயிகள் கூறுகையில், தற்போது முருங்கை ரூ.30 வரை விற்பனையாகிறது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் முருங்கை மரம் பாதிப்படைந்து வருகிறது. எனவே தோட்டக்கலைதுறை நிர்வாகம் சார்பில் எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தற்ேபாது முருங்கை இலை பறிக்கும் பணியில் நாங்கள் தீவிரமாக இறங்கியுள்ளோம். ஒரு கிலோ ரூ.80 முதல் 85 வரை சந்தையில் விலை போகிறது. இந்த மூலிகை இலையை மொத்த வியாபாரிகளும், சில்லரை வியாபாரிகளும் விவசாயிகளிடம் இருந்து விலைக்கு வாங்கி வெளிமாநிலத்திற்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர், என்றனர்.

மேலும் இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், திமுக ஆட்சி அமைத்தவுடன் விவசாயிகளுக்கு தனி கவனம் செலுத்தி விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று அதிகாரிகளை நேரடியாக விளைநிலத்திற்கு சென்று மகசூலை பெருக்க வேண்டும், விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள், மற்றும் விவசாய கருவிகள் என நேர்த்தியாக செயல்பட்டு வருகிறது. ஆகையால் பெரியகுளம் பகுதியில் முருங்கை சாகுபடியில் தேயிலை கொசுவினை கட்டுப்படுத்தி, முருங்கை மகசூலை அதிகரித்து விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை சமூகத்தில் பொருளாதாரரீதியாக உயர்த்த வேண்டும், என்றார்.

Related Stories: