பான் மசாலா,சிகரெட்கள் மீது அதிகபட்ச செஸ் வரி நிர்ணயம்

புதுடெல்லி: பான் மசாலா மற்றும் சிகரெட்கள் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீது அதிகபட்ச செஸ் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  கடந்த வெள்ளிக்கிழமையன்று  நிதி மசோதா 2023 ஐ சில திருத்தங்களுடன்  ஒன்றிய அரசு மக்களவையில் நிறைவேற்றியது. இந்த திருத்தங்களின்படி பான் மசாலா, சிகரெட்டுகள் மற்றும் இதர புகையிலை பொருட்களுக்கு  அதன் சில்லரை விலை விற்பனையில் அதிகபட்ச ஜிஎஸ்டி இழப்பீட்டு  வரி விதிக்கப்பட உள்ளது.  இந்த திருத்தத்தின்படி பான்மசாலாவுக்கான சில்லரை விலை ஒரு யூனிட்டுக்கு அதிகபட்சமாக 51 சதவீதம் வரை செஸ் வரி விதிக்கப்படும். அதே போல் புகையிலை பொருட்களுக்கான செஸ் வரி விதிப்பு ஆயிரத்துக்கு ரூ.4,170 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது புகையிலை பொருட்கள் மீது 290 சதவீத வரியும், பான் மசாலா பொருட்கள் மீது 135 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வரிவிகிதமான 28 சதவீதத்துக்கும் மேல் செஸ்  வரி விதிக்கப்படுகிறது. கடந்த 2021ல் ஒடிசா நிதியமைச்சர் நிரஞ்சன் பூஜாரி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலின் அமைச்சர்கள் குழு பான் மசாலா மற்றும் குட்கா மீது விதிக்கப்படும் வரி தொடர்பாக ஆய்வு செய்தபோது வரி ஏய்ப்புகளைத் தடுக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை பரிந்துரை செய்திருந்தது.  இந்த குழுவின் பரிந்துரையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான  ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்று கொண்டது. அதன் அடிப்படையில் இதில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

Related Stories: