பாஜவுக்கு எதிரான போராட்டத்தில் பிராந்திய கட்சிகளை ஆதரிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்

லக்னோ: ‘பாஜவுக்கு எதிரான போராட்டத்தில் பிராந்திய கட்சிகளை தேசிய கட்சிகள் ஆதரிக்க வேண்டும்’ என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறி உள்ளார். உபி முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் யாதவ், லக்னோவில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ராகுல் காந்தி தகுதிநீக்க விவகாரத்தில், காங்கிரசின் நடவடிக்கைகளுக்கு சமாஜ்வாடி ஆதரவு தெரிவிக்குமா, ராகுலுக்கு அனுதாபம் காட்டுமா என்பதல்ல கேள்வி. நாட்டின் ஜனநாயகமும் அரசியலமைப்பும் காப்பாற்றப்படுமா இல்லையா என்பதுதான் இப்போதைய பிரச்னை. நாங்கள் எந்த கட்சிக்கும் அனுதாபம் காட்ட முடியாது. மாநில அளவில் பாஜவுக்கு எதிரான போராட்டத்தில் பிராந்திய கட்சிகளுக்கு தேசிய கட்சிகள் ஒத்துழைத்து உதவ வேண்டும்.

பிராந்திய கட்சிகள் தங்களுக்கு தீங்கு செய்ததாக தேசிய கட்சிகள் எண்ணக் கூடாது. உண்மையில், ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் தேசிய கட்சிகள் தான் மாநில கட்சிகளுக்கு கேடு செய்துள்ளன. இன்று சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை பிராந்திய கட்சிகளை குறிவைக்கின்றன. எனவே கூட்டணியை உருவாக்குவது எங்கள் வேலையில்லை. கூட்டணிக்கு ஒத்துழைப்பதுதான் எங்கள் வேலை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: