100 நாள் வேலை உறுதி திட்ட ஊதியம் உயர்வு: ஊரக வளர்ச்சி அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் 2023-24ம் ஆண்டுக்கான ஊதியத்தை ஒன்றிய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் 2023-24ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில், 100 நாள் வேலை உறுதி திட்டத்துக்கான ரூ.60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் ரூ.73 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டில் 21.6 சதவீதம் குறைவாக ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சகம் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கான ஊதிய உயர்வு பட்டியலை வௌியிட்டுள்ளது.

அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்துக்கு அதிகபட்சமாக ஒருநாள் ஊதியம் ரூ.255ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.231ஆக இருந்தது. பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு ரூ.210ஆக இருந்த ஊதியம் ரூ.218ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்த அளவாக, சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ரூ.204ஆக இருந்த ஊதியம் ரூ.221ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கர்நாடகா, கோவா, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கும் குறைந்த சதவீத ஊதிய உயர்வே அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: