போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.80 லட்சம் நிலம் அபேஸ்: பெண் உள்பட 3 பேர் கைது

சென்னை: போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை  மோசடி செய்த பெண் உள்பட 3 பேரை நிலமோசடி தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். கோயம்பேடு, புதிய காலனி பகுதியில் வசிப்பவர் விஜயராணி (37). இவருக்கு கடந்த 2001ம் ஆண்டு, ஆவடி அருகே வெள்ளானூர் கிராமம், ஆர்ச் அந்தோனியார் நகரில் 2,400 சதுர அடி நிலம் இருந்தது. இவர், சிறுமியாக இருந்தபோது விஜயராணியின் தந்தை தன் மனைவி சரோஜா (58), அக்கா அமுலு (45), மாமா ராமமூர்த்தி (56) ஆகியோர் பெயரில் நிலத்தை பத்திரப்பதிவு செய்துள்ளார்.

 இதில், விஜயராணிக்கு சொந்தமான நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.80 லட்சம். இதற்கிடையே, கடந்த 2017ம் ஆண்டு விஜயலட்சுமி என்ற பெண்ணின் உதவியுடன் ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணம் மூலமாக விஜயராணிக்கு சொந்தமான நிலத்தை அவரது அக்கா அமுலு தனது பெயருக்கு மாற்றிக்கொண்டனர். இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அமுலு வீட்டை விட்டு வெளியேறியதால், அந்த நிலத்தை தனது 2 மகன்களுக்கும் தலா 1,200 சதுர அடி என ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் மூலமாக ராமமூர்த்தி பத்திரப்பதிவு செய்துள்ளார். பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன் ஆள்மாறாட்டத்தின் மூலமாக போலி ஆவணங்கள் தயாரித்து, தனது உறவினர்களே நிலமோசடியில் ஈடுபட்டிருப்பது விஜயராணிக்குத் தெரியவந்தது.

இதுகுறித்து ஆவடி காவல் ஆணையரக நிலமோசடி தடுப்பு பிரிவு போலீசில், கடந்த 2 நாட்களுக்கு முன் விஜயராணி புகார் அளித்தார். அதன்அடிப்படையில், ஆவடி நிலமோசடி தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், விஜயராணிக்கு சொந்தமான ரூ.80 லட்சம் மதிப்பிலான நிலத்தை ஆள்மாறாட்டம் மூலமாக போலி ஆவணங்கள் தயாரித்து ராமமூர்த்தி உள்பட 3 பேர் நிலமோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.  இதைத் தொடர்ந்து, நேற்றுமுன்தினம் மாலை நிலமோசடியில் ஈடுபட்ட ஆரணி பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி (33), சென்னை மதுரவாயலைச் சேர்ந்த ராமமூர்த்தி (56), மனோஜ் (25) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: