சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அம்மா உணவகத்தின் தரத்தை உயர்த்த திட்டம்: பட்ஜெட்டில் சுமார்ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு?தனியார் ஓட்டலுக்கு சவாலாக உணவு வகைகளை மாற்ற திட்டம்

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அம்மா உணவகத்தின் தரத்தை உயர்த்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மேலும், இதற்காக பட்ஜெட்டில் சுமார் ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தனியார் ஓட்டலுக்கு சவால் விடும் வகையில் உணவு வகைகளை மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. சென்னையில் முதலில் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விரிவுபடுத்தப்பட்டது. ஆனால், அவரது மறைவிற்கு பிறகு இந்த திட்டத்தில் லாப, நஷ்டம் பார்க்க ஆரம்பித்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு. அப்போதே  நஷ்டம் ஏற்பட்டதால் சில உணவகங்கள் மூடப்பட்டன என்று எடப்பாடி பழனிசாமி அரசு  கூறியது. இதன் மூலம் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அம்மா உணவக திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் ஏற்பட்டது சமூக ஆர்வலர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற போது, கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்கள் முடக்கப்பட்டதோடு, பல திட்டங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால்,  முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினோ, அம்மா உணவக திட்டம் தொடரும் என்றதோடு, அம்மா என்ற பெயரிலேயே இத்திட்டம் தொடர்ந்து நடத்தப்படும் என்று அறிவித்தார். அவரது அறிவிப்பு, அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுத் தந்தது. இருந்தாலும் பல இடங்களில் அம்மா உணவகம் மூடப்படும் என பேச்சு அடிபட்டது.  ஆனால், சென்னை மாநகராட்சியோ தொடர்ந்து அம்மா உணவகத்தை  சிறப்பாக நடத்தி வருகிறது. மேலும், விரைவில் தாக்கல் செய்யப்படும் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அம்மா உணவகத்திற்கென நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர், அம்மா உணவகம் பற்றி பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எந்தவொரு அம்மா உணவகத்தையும் மூடவில்லை. 350க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்களில்  ஒரு நாளைக்கு 100க்கும் குறைவானவர்களே வருகிறர்கள். 500க்கும் குறைவாக வருமானம் ஈட்ட கூடிய  35 அம்மா உணவகத்தை   மாநகராட்சி அடையாளம் கண்டுள்ளது. இந்த அம்மா உணவகத்தை பரபரப்பாக உள்ள  பகுதிகளுக்கு மாற்ற விரும்புகிறோம்.  வரும் நிதியாண்டு பட்ஜெட்டில் அம்மா உணவகத்திற்கென தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு அம்மா உணவகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். அம்மா உணவகத்தில் உள்ள பாத்திரங்கள், அடுப்புகள், மின் விளக்குகள், புதிதாக வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் அம்மா உணவகத்திற்கு பெயின்ட் அடித்து புதுப்பிக்கவுள்ளோம். முறைகேடாக உணவுகள் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்படுவதை தடுக்க சிசிடிவி அமைக்க ஆலோசித்து வருகிறோம்.

 சில புதிய உணவு வகைகளை சேர்க்க திட்டமிட்டுள்ளோம். உணவு வகைகள் தனியார் ஓட்டலுக்கு நிகராக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் மக்கள் அம்மா உணவகத்திற்கு வர விரும்புவார்கள். இதற்காக சுமார் ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தினசரி வருவாய் ரூ.1,000 எட்டுவதே எங்கள் நோக்கம். ஒரு போதும் அம்மா உணவகம் மூடப்படாது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர். அம்மா உணவகம் தரம் உயர்த்தப்பட்டால்  நிச்சயம் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

* திமுக ஆட்சிக்கு வந்த  பிறகு எந்தவொரு அம்மா உணவகத்தையும் மூடவில்லை. 350க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்களில்  ஒரு நாளைக்கு 100க்கும் குறைவானவர்களே வருகிறர்கள். 500க்கும் குறைவாக வருமானம் ஈட்ட கூடிய  35 அம்மா உணவகத்தை மாநகராட்சி அடையாளம் கண்டுள்ளது. இந்த  அம்மா உணவகத்தை பரபரப்பாக உள்ள பகுதிகளுக்கு மாற்ற விரும்புகிறோம்.

Related Stories: